IND vs ZIM : அவர எவ்ளோதான் அவமானப்படுத்துவீங்க – சீனியர் வீரரை மதிக்காத பிசிசிஐயை விளாசும் ரசிகர்கள்

Shikhar Dhawan Team India
- Advertisement -

அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக ஆகஸ்ட் 27இல் துவங்கும் ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. அதற்கு முன்பாக வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 2-வது தர இளம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்ட அணியில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் கேப்டனாக செயல்பட்டு 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்று காட்டிய சீனியர் நட்சத்திரம் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலைமையில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறிய கேஎல் ராகுல் அதன்பின் நடந்த அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய தொடர்களில் பங்கேற்காத நிலையில் அடுத்ததாக நடைபெறும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணிக்கு திரும்பியதும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் அணியில் அவரது பெயர் இடம் பெறாமல் இருந்தது.

- Advertisement -

கேப்டனாக ராகுல்:
ஆனால் தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் ஜிம்பாப்வே தொடருக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்று நேற்று இரவோடு இரவாக பிசிசிஐ அறிவித்துள்ளது பல ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. ஏனெனில் ஜிம்பாப்வே தொடருக்கு குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் குணமடைய தாமதம் ஏற்பட்டதால் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் இப்படி திடீரென்று மாற்றுவதற்கான அவசியம் என்னவென்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதிலும் ஜிம்பாப்வே போன்ற அணிக்கு எதிராக வெற்றி பெற முடியாத அளவுக்கு ராகுலை விட தவான் என்ன அனுபவமும் திறமையும் கேப்டன்ஷிப் பண்பும் இல்லாதவரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை கடைசி நேரத்தில் குணமடைந்திருந்தாலும் சீனியரான அவரது தலைமையில் ராகுல் துணை கேப்டனாக விளையாட மாட்டாரா என்று கோபப்படும் ரசிகர்கள் தவானின் அனுபவத்தையும் அவர் ஆற்றிய பங்கையும் பிசிசிஐ மறந்துவிட்டு நன்றி கெட்ட செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

மீண்டும் அவமானம்:
ஏனெனில் 2013 முதல் ரோகித் சர்மாவுடன் நிரந்தர தொடக்க வீரராக அசத்திய ஷிகர் தவான் ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு நிகராக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் வெற்றிகளை தேடி கொடுத்துள்ள அவர் கடந்த 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்தை சந்தித்த போதிலும் வலியுடன் சதமடித்து வெற்றி பெற வைத்து வெளியேறினார். அந்த நிலைமையில் அவரது இடத்தில் வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் அவரை விட சிறப்பாக செயல்பட்டு அந்த இடத்தை தனக்கு சொந்தமாக்கி விட்டார்.

அதனால் காயத்திலிருந்து திரும்பிய தவான் 35 வயதை கடந்து விட்டார் என்பதாலும் முன்பைவிட அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவிக்க தடுமாறுகிறார் என்பதையும் காரணமாக வைத்து தேர்வுக்குழு அவரை கழற்றி விட துவங்கியுள்ளது. அதிலும் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் காயமடைந்தால் அல்லது ஓய்வெடுத்தால் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே போன்ற 2-வது தர அணிகளுக்கு எதிராக கேப்டனாக தேர்வு செய்யப்படும் அவர் அடுத்த தொடரிலேயே கழற்றி விடப்படுகிறார்.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
இருப்பினும் நிதர்சனத்தை புரிந்துகொண்ட ஷிகர் தவான் தனக்கான நேரம் முடிந்து விட்டதாகவும் இளம் வீரர்கள் விளையாடுவதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்து வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடரில் கொடுக்கப்படும் வேலையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் தற்போது மீண்டும் அவமானப்படுத்தும் வகையில் ராகுலுக்கு கீழே அவரை துணைக் கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இங்கு ஷிகர் தவான் கேப்டனாக விளையாடி விட்டுதான் போகட்டுமே அதற்கு அவர் தகுதியற்றவரா என்று வேதனை தெரிவிக்கும் ரசிகர்கள் வருங்கால கேப்டனாக இருந்தாலும் இந்த ஒரு தொடரில் கேஎல் ராகுல் அவருக்கு கீழே விளையாட மாட்டாரா அந்தளவுக்கு தவானை விட உயர்ந்து விட்டாரா என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க : IND vs ZIM : அவசர அவசரமா டீம்ல சேர்த்து கே.எல் ராகுலை கேப்டனாக்கிய பி.சி.சி.ஐ – என்ன காரணம்?

இத்தனைக்கும் ஷிகர் தவான் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2018 ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்தவர். மறுபுறம் கேஎல் ராகுல் இதுவரை எந்த ஒரு பெரிய தொடரிலும் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement