இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ராஜ்கோட் நகரில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட சாதனைகள் இந்த மைதானத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒரே போட்டியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் அறிமுகமானது, பென் ஸ்டாக்ஸின் நூறாவது போட்டியாக அமைந்தது, அஸ்வின் 500 விக்கெட் எடுத்தது என பல்வேறு சாதனைகள் இந்த போட்டியில் தொடர்ச்சியாக படைக்கப்பட்டு வருகின்றது.
அதோடு இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 445 ரன்கள் குவித்தது மட்டுமின்றி தற்போது இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 319 ரன்களில் சுருண்டது. இப்படி இந்த போட்டி சுவாரசியமாக நடைபெற்று வருகிறது.
இவ்வேளையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவும் இந்த போட்டியில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை விவரம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்திய அணிக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 280 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியின் மூலம் தனது 70-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அவர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 281-வது விக்கெட்டை அவர் பதிவு செய்துள்ளார். மேலும் இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் :
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகளை எடுத்த ஐந்தாவது இந்திய பவுலர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய மண்ணில் அணில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளையும், அஸ்வின் 347 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டுகளையும், கபில் தேவ் 219 விக்க்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க : சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் கார் பரிசளிக்க விரும்புகிறேன். ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு – எதற்காக தெரியுமா?
அதனை தொடர்ந்து இன்றைய போட்டியில் ஸ்டோக்ஸ்-இன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா இந்திய மண்ணில் தனது 200-வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் 112 ரன்கள் குவித்த வேளையில் தற்போது பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.