145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரவீந்திர ஜடேஜா படைத்த புதிய உலகசாதனை – இந்தியாவுக்கு பெருமை

Jadeja-1
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கியது. மார்ச் 4ஆம் தேதி அன்று துவங்கிய இப்போட்டியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்த போட்டியில் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி 100 போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

Kohli-1

- Advertisement -

கடந்த 2011 முதல் இந்திய கிரிக்கெட்டில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும் வெற்றிகரமான கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவருக்கு பிசிசிஐ சார்பில் சிறப்பு தொப்பி பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 33 ரன்கள் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா 29 என சுமாரான தொடக்கத்தை அளித்தனர்.

இந்தியா மிரட்டல் பேட்டிங்:
அடுத்து வந்த ஹனுமா விஹாரி அரைசதம் அடித்து 58 ரன்கள் எடுக்க அவருடன் தனது 100வது போட்டியில் ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் விளையாடிய விராட் கோலி 48 ரன்களில் அவுட்டானார். அதன்பின் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 27 ரன்களில் அவுட் ஆனதால் 175/4 என தடுமாறிய இந்தியாவை ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவில் இருந்து மீட்டனர்.

pant 1

இதில் 97 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் உட்பட அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 96 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். மறுபுறம் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருக்க அவருடன் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் தன் பங்கிற்கு 130 ரன்கள் பார்ட்னெர்ஷிப் அமைத்து இந்தியாவை நல்ல நிலைக்கு கொண்டு வந்த பின் 61 ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் மீண்டும் தொடர்ந்து இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து 175* ரன்கள் விளாசினார். இப்படி இந்திய மிடில் ஆர்டர் வீரர்களின் அடுத்தடுத்த ரன் குவிப்பில் இந்தியா தனது முதல் இன்னிங்சை 574/8 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

- Advertisement -

இந்தியா மெகா வெற்றி:
இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை வீரர்கள் ஒன்றரை நாட்கள் பீல்டிங் செய்த சோர்வினால் இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக அந்த அணி கேப்டன் கருணாரத்னே, அனுபவ வீரர் அஞ்சலோ மேத்யூஸ் ஆகிய முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க முடியாமல் அவுட் ஆனதால் அடுத்து வந்த வீரர்களும் இந்திய பவுலர்களிடம் தங்களது விக்கெட்டுகளையும் பறி கொடுத்தார்கள். இதனால் இலங்கை தனது முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நிஷாங்கா 61* ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Jadeja

இந்தியா எடுத்த ரன்களில் பாதியளவு கூட எடுக்காத காரணத்தால் பாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி மீண்டும் 2வது இன்னிங்ஸில் போராடி டிரா செய்யுமா என எதிர்பார்த்த இலங்கை அணி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் 2வது இன்னிங்சிலும் அந்த அணியின் கேப்டன் உள்ளிட்ட அனைத்து முக்கியமான பேட்ஸ்மேன்களும் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மொத்தத்தில் மீண்டும் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அந்த அணி தனது 2-வது இன்னிங்சில் வெறும் 178 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோல்வி அடைந்தது.

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 51* ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் மீண்டும் பந்துவீச்சில் தெறிக்கவிட்ட ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதன் வாயிலாக இன்னிங்ஸ் மற்றும் 222 என்ற மெகா வெற்றியை பதிவு செய்த இந்தியா 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 -0 * என முன்னிலை பெற்றுள்ளது.

ashwin 1

ரவீந்திர ஜடேஜா உலகசாதனை:
இப்போட்டியில் முதலில் பேட்டிங்கில் 175* ரன்கள் விளாசி பின்னர் பந்துவீச்சில் மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

அத்துடன் இப்போட்டியில் 175* ரன்களை எடுத்த அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50 வருடங்களுக்குப் பின் ஒரே போட்டியில் 150+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்தார். இதற்கு முன்பு முன்னாள் இந்திய வீரர்கள் வினோ மன்கட் (1952, இங்கிலாந்துக்கு எதிராக) மற்றும் பாலி உம்ரிகர் (1962ஆம் ஆண்டு, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஆகியோர் இந்த சாதனை படைத்துள்ளார்கள்.

Ravindra Jadeja

அதோடு நிற்காத ஜடேஜா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை எடுத்து இந்த போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் வாயிலாக ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 150+ ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற புதிய சரித்திர உலக சாதனையை படைத்தார். கடந்த 145 வருடங்களாக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் ஒரே போட்டியில் 150க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை எடுத்ததே கிடையாது.

இதையும் படிங்க : ஷேன் வார்னே ஒரு சுமாரான பவுலர் தான் – வாயை விட்டு வம்பில் மாட்டிய இந்திய ஜாம்பவான், வறுக்கும் ரசிகர்கள்

இதற்கு முன் கடந்த 1966ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கேரி சோபர்ஸ் 174 ரன்களும் 8 விக்கெட்களையும் எடுத்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது வரலாற்றிலேயே முதல் முறையாக ரவீந்திர ஜடேஜா ஒரே போட்டியில் 150+ ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை எடுத்து இந்த புதிய உலக சாதனையை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Advertisement