ஷேன் வார்னே ஒரு சுமாரான பவுலர் தான் – வாயை விட்டு வம்பில் மாட்டிய இந்திய ஜாம்பவான், வறுக்கும் ரசிகர்கள்

Warne-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ஜாம்பவான் ஷேன் வார்னே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று முன்தினம் தாய்லாந்தில் காலமானார். வெறும் 52 வயது மட்டுமே நிரம்பிய அவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மகத்தான சுழல் பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். அவரின் இந்த இழப்பால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ள சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

warne 1

- Advertisement -

கடந்த 1992ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக அறிமுகமான அவர் அதன்பின் காலப்போக்கில் தனது மாயாஜால சுழல் பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். குறிப்பாக 90களில் தடுமாறிய லெக் ஸ்பின் பந்துவீச்சில் புதிய பரிணாமங்களை கொண்டு வந்த அவரை லெக் ஸ்பின் பந்துவீச்சு கலையின் கலைஞன் என கிரிக்கெட் ஜாம்பவான்களும் வல்லுநர்களும் போற்றி வருகிறார்கள்.

மகத்தான ஷேன் வார்னே:
அவரின் பெரும்பாலான பந்துகள் பிட்ச் ஆனபின் யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென வேறு திசையில் சுழன்று பேட்ஸ்மேன்களை ஏமாற்றி விக்கெட்டாக மாறிவிடும். அந்த அளவுக்கு அபார திறமை கொண்ட அவர் கடந்த 1993ஆம் ஆண்டு இங்கிலாந்து பேட்ஸ்மேன் மைக் கெட்டிங்க்கு எதிராக வீசிய பந்து 20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்து என வல்லுநர்களால் தேர்வு செய்யப்பட்டது.

இப்படி வரலாற்றில் தனது பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ள அவர் காலத்தால் அழிக்க முடியாத உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளராக கிரிக்கெட்டை விட்டுச் சென்றுள்ளார். 708 டெஸ்ட் விக்கெட்டுகள் உட்பட 1001 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு பின் அதிக விக்கெட்டுகளை எடுத்த 2வது பந்துவீச்சாளர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

சுமாரான பவுலர்:
அப்படிப்பட்ட அவருக்கு பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் புகழாரம் சூட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஷேன் வார்னே ஒரு சுமாரான பந்துவீச்சாளர் தான் என்று இந்தியாவின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “இல்லை, அவர் ஒரு மகத்தான சுழல்பந்து வீச்சாளர் கிடையாது. என்னை பொருத்தவரை ஷேன் வார்னேவை விட இலங்கையின் முத்தையா முரளிதரன் தான் உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்”

“இந்தியாவுக்கு எதிரான அவரின் சாதனை புள்ளிவிபரங்களை புரட்டிப் பாருங்கள். அது மிகவும் சுமாராகவே உள்ளது. அவர் இந்திய மண்ணில் ஒரே ஒரு முறை மட்டுமே 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார். அதுவும் நாக்பூர் நகரில் நடந்த அந்த போட்டியில் ஜஹீர் கான் வேண்டுமென்றே அடிக்கப் போய் கேட்ச்சாகி 5வது விக்கெட்டாக மாறியது. சுழல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் மிகப் பெரிய அளவில் சாதிக்க வில்லை என்பதால் அவரை ஒரு மிகச்சிறந்த பவுலர் என நான் கூற மாட்டேன். மறுபுறம் முத்தையா முரளிதரன் இந்தியாவுக்கு எதிராக ஏராளமான வெற்றிகளை பெற்று உள்ளார். எனவே எனது புத்தகத்தில் வார்னேவை விட முத்தையா முரளிதரனை சிறந்த ஸ்பின் பவுலர் என குறிப்பிடுவேன்” என கூறினார்.

வறுக்கும் ரசிகர்கள்:
அவரின் இந்த கருத்து இந்திய ரசிகர்கள் உள்ளிட்ட பலரிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர் கூறும் முத்தையா முரளிதரன் பெரும்பாலும் இலங்கை, இந்தியா போன்ற சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க கூடிய நாடுகளில் பந்துவீசி தான் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

warne 1

ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு மட்டுமே அதிக கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் காணப்படும் தார் ரோடு போன்ற மைதானங்களில் தனது அபார திறமையை பயன்படுத்தி தான் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எனவே முரளிதரனை விட வார்னே தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற பரவலான கருத்து ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. அந்த வேளையில் ஷேன் வார்னே பற்றி இவ்வாறு கூறியுள்ள சுனில் கவாஸ்கர் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வம்பில் மாட்டி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

Advertisement