IPL 2023 : ஆல் டைம் சிறந்த ஆல் ரவுண்டராக – ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக ஜடேஜா படைத்த சூப்பர் சாதனை, விவரம் இதோ

- Advertisement -

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் பரபரப்பான லீக் சுற்றுக்கு பின் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் பிளே ஆப் சுற்று துவங்கியுள்ளது. அதில் மே 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 பிளே ஆஃப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நடப்புச் சாம்பியன் குஜராத்தை புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மே 28இல் அகமதாபாத் நகரில் நடைபெறும் ஃபைனலுக்கு நேரடியாக முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் போராடி 172/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 60 (44) ரன்களும் டேவோன் கான்வே 40 (34) ரன்களும் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய குஜராத் தங்களை விட மிகச் சிறப்பாக பந்து வீசிய சென்னைக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட் இழந்து 20 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அசத்தல் சாதனை:
ரிதிமான் சஹா 12, கேப்டன் பாண்டியா 8, சனாகா 17, டேவிட் மில்லர் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக சுப்மன் கில் 42 (38) ரன்கள் எடுத்தார். சென்னை சார்பில் அதிகபட்சமாக தீபக் சஹார், பதிரனா, தீக்சனா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதிலும் குறிப்பாக 4 ஓவரில் வெறும் 18 ரன்களை 4.50 என்ற இதர சென்னை பவுலர்களை காட்டிலும் குறைந்த எக்கனாமியில் எடுத்த ஜடேஜா இலங்கை கேப்டன் தசுன் சனாகாவை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க வைத்து அவுட்டாக்கி முரட்டுத்தனமாக பினிஷிங் செய்யக்கூடிய டேவிட் மில்லரை கிளீன் போல்ட்டாக்கி 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதே போல பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் சவாலான பிட்ச்சில் 2 பவுண்டரியுடன் 22 (16) ரன்கள் எடுத்த அவர் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக சென்னை ஃபைனல் செல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். கடந்த பல வருடங்களாக சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வரும் அவர் கடந்த வருடம் கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் அடுத்ததால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பி காயத்தால் வெளியேறினார்.

- Advertisement -

அது இறுதியில் சென்னைக்கு புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பரிசாக கொடுத்த நிலையில் இந்த வருடம் குணமடைந்து இந்தியாவுக்காக சமீபத்திய தொடர்களில் சிறப்பாக விளையாடி ஃபார்முக்கு திரும்பி அவர் இந்த சீசனில் ஆரம்பம் முதலே பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும் பந்து வீச்சில் தொடர்ந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் இந்த சீசனில் இதுவரை பேட்டிங்கில் 175 ரன்களை எடுத்துள்ள அவர் பந்து வீச்சில் 19 விக்கெட்களை எடுத்து மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக வெற்றிகளில் பங்காற்றி 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.

அதை விட நேற்றைய போட்டியில் எடுத்த 2 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட்களை எடுத்த முதல் இடது கை பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார். குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஒரு ஸ்பின்னராக அவர் இந்த சாதனையை படைத்துள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும். அந்த பட்டியல்:
1. ரவீந்திர ஜடேஜா : 151*
2. அக்சர் படேல் : 112
3. ஆஷிஷ் நெஹ்ரா : 106
4. ட்ரெண்ட் போல்ட் : 105
5. ஜாஹீர் கான் : 102

இதையும் படிங்க:IPL 2023 : இது புதுசா இருக்கே, வெற்றியுடன் 17,000 மரக்கன்றுகளை நட உதவிய சிஎஸ்கே – பிசிசிஐ’யின் அசத்தல் திட்டம் இதோ

அத்துடன் 2267 ரன்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் 1000+ ரன்கள் மற்றும் 150+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரராகவும் ஆல் டைம் பட்டியலில் ட்வயன் ப்ராவோ (1560 – 183), சுனில் நரேன் (1046 – 163) ஆகியோருக்கு பின் 3வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார். அப்படி ஆல் ரவுண்டராக மேட்ச் வின்னராக அசத்தி வரும் அவர் ஃபைனலில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு சென்னைக்கு 5வது கோப்பையை வெல்ல உதவுவாரா என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement