IPL 2023 : இது புதுசா இருக்கே, வெற்றியுடன் 17,000 மரக்கன்றுகளை நட உதவிய சிஎஸ்கே – பிசிசிஐ’யின் அசத்தல் திட்டம் இதோ

CSK vs GT
- Advertisement -

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து மே 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 பிளே ஆப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த முன்னாள் சாம்பியன் சென்னை மே 28இல் நடைபெறும் மாபெரும் ஃபைனலுக்கு நேரடியாக தகுதி பெற்று அசத்தியது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ருதுராஜ் கைக்வாட் 60 (44) டேவோன் கான்வே 40 (35) என தொடக்க வீரர்களின் பொறுப்பான ரன்கள் குவிப்பால் 20 ஓவர்களில் போராடி 172/7 ரன்கள் சேர்த்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் மோகித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய குஜராத் முதல் ஓவரிலிருந்தே துல்லியமாக பந்து வீசிய சென்னை பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

புதிய ஐடியா:
சஹா 12, கேப்டன் பாண்டியா 8, சனாகா 17, மில்லர் 4 என முக்கிய விரல்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் சுப்மன் கில் 42 (38) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், தீக்சனா, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். முன்னதாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரலை போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்காத பந்துகளை 0 அல்லது நேரான கோடு அல்லது காலி கட்டமாக தான் காட்டுவார்கள்.

ஆனால் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பிய சேனல்களில் சென்னை பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்காத பந்துகளில் வழக்கம் போல 0 காட்டுவதற்கு பதிலாக சிறிய அளவிலான பச்சை மரங்கள் காட்டப்பட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ஒரு அணி பதிவு செய்யும் டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகளை நடுவதற்கு பிசிசிஐ தலைமையிலான ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதே அதற்கான காரணமாகும்.

- Advertisement -

குறிப்பாக 15 வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரால் பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கும் பிசிசிஐ அதற்கு உதவிகரமாக இருந்து வரும் இந்திய தாயின் மண்ணை பாதுகாப்பதற்காக இந்தப் பிளே ஆப் சுற்றில் மட்டும் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் மொத்தமாக 34 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. அதன் காரணமாக 17,000 மரக்கன்றுகளை நடுவதற்கு சென்னை அணி நேற்றைய போட்டியில் மறைமுகமாக உதவியுள்ளது.

ஆனால் 2வது இன்னிங்ஸில் தடுமாற்றமாக பேட்டிங் செய்த குஜராத் சென்னையை மிஞ்சி 50 டாட் பந்துகளை எதிர்கொண்டு தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அந்த 50 டாட் பந்துகளுக்கு நிகராக 25,000 மரக்கன்றுகளை பிசிசிஐ நடுவதற்கு குஜராத் மறைமுகமாக உதவி செய்துள்ளது. இந்த திட்டத்தை நேற்று சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்த ஜெய் ஷா தலைமையிலான ஐபிஎல் நிர்வாகம் துவங்கியுள்ளது.

இதையும் படிங்க:வீடியோ : பாண்டியாவின் ஈகோவுடன் விளையாடிய தல தோனி – திட்டம் போட்டு தூக்கிய பலே கேப்டன்ஷிப்

அந்த வகையில் குவாலிபயர் 1, 2 எலிமினேட்டர் மற்றும் ஃபைனல் ஆகிய 4 பிளே ஆப் போட்டிகளில் பதிவு செய்யப்படும் டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகள் வீதம் இந்த ஐபிஎல் முடிந்ததும் இந்தியாவின் இயற்கையை பாதுகாக்கும் வகையில் பிசிசிஐ நட உள்ளது. மொத்தத்தில் வரலாற்றில் இல்லாத இந்த புதுமையான திட்டத்துக்கு அனைத்து இந்திய ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்து பிசிசிஐயை பாராட்டுகின்றனர்.

Advertisement