ஐபிஎல் 2024 டி20 தொடரில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் 6வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2022 சீசனில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே பாண்டியா குஜராத்துக்கு கோப்பையை வென்று கொடுத்தார். ஆனால் அதே பாண்டியா தலைமையில் 2024 சீசனில் சுமாராக விளையாடிய மும்பை 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்து முதல் அணியாக வெளியேறியது.
இந்த தோல்விக்கு சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகிய இருவரை தவிர்த்து மற்ற வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் இஷான் கிசான் 14 போட்டிகளில் வெறும் 320 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். மும்பை அணிக்காக 15.25 கோடிக்கு விளையாடும் அவர் கடந்த 2023 தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்லி பாதியிலேயே வெளியேறினார்.
அவமானத்தின் பரிசு:
அதைத் தொடர்ந்து எவ்விதமான கிரிக்கெட்டிலும் விளையாடாமல் இருந்த அவரை 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்வு செய்ய இந்திய அணி நிர்வாகம் விரும்பியது. அதனால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாராக இருங்கள் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு வெளிப்படையாகவ அறிவுரை வழங்கினார். ஆனால் அதைக் கேட்காத இசான் கிசான் பரோடாவுக்கு சென்று பாண்டியா சகோதரர்களுடன் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாட தயாரானார்.
அதனால் கோபமடைந்த பிசிசிஐ 2023 – 24 இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து அவரை அதிரடியாக நீக்கியது. அந்த சூழ்நிலையில் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இசான் கிசான் களமிறங்கினார். ஆனால் அந்த வாய்ப்பில் சுமாராக செயல்பட்டதால் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட்டுக்கு செய்த அவமானத்திற்காக இசான் கிசான் விலையை கொடுத்துள்ளதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியது முதல் இசான் கிசான் எந்த கிரிக்கெட்டையும் விளையாடவில்லை. அப்போது நம்மால் ஐபிஎல் தொடரில் பவுலர்களை அடித்து நொறுக்க முடியும் என்று அவர் நினைத்தார்”
இதையும் படிங்க: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை அணியிலிருந்து ரோஹித் மொத்தமாக கழற்றி விடப்படுவாரா? மார்க் பவுச்சர் சூசகம்
“ஆனால் கிரிக்கெட்டுக்கு நீங்கள் அவமரியாதை செய்யத் துவங்கினால் அது உங்களுக்கு பாடத்தை கற்றுக் கொடுக்கும். கிரிக்கெட் என்பது அனைத்தையும் சாதித்து விட்டதாக நீங்கள் நினைத்தால் உங்களை திருப்பி அடிக்கக்கூடிய ஒரு விளையாட்டாகும். உங்களால் இங்கே வந்து எடுத்த எடுப்பில் அடிக்க முடியாது. ஐபிஎல் தொடரில் விளையாடும் சர்வதேச வீரர்கள் உங்களை அடிக்க விட மாட்டார்கள்” என்று கூறினார்.



