ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு 68வது போட்டி துவங்கியது. பெங்களூரு நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்று விட்டன.
எனவே எஞ்சியிருக்கும் கடைசி இடத்தைப் பிடிப்பதற்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளிடம் போட்டி காணப்படுகிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் இப்போட்டியில் வெல்லும் அணி 4வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதனால் இப்போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கடந்த ஒரு வாரமாக காணப்பட்டது. அதற்கிடையே மழை வருவது போல் இருந்ததால் இப்போட்டி நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்தது.
சிஎஸ்கே லெவன்:
இருப்பினும் சரியான நேரத்தில் போட்டி துவங்குவதற்கு மழை கருணை காட்டியது. அதனால் நேரத்திற்கு துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. குறிப்பாக ஏற்கனவே நிறைய போட்டிகளில் டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்த ருதுராஜ் கெய்க்வாட்க்கு இந்த வாழ்வா – சாவா போட்டியில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
அந்த அதிர்ஷ்டத்தை பெற்ற ருதுராஜ் ஒவ்வொரு போட்டியையுமே நாக் அவுட் போட்டியாக நினைத்து விளையாடுவதாக தெரிவித்தார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக இங்கிலாந்து வீரர் மொயின் அலி சென்னை அணியிலிருந்து வெளியேறினார். எனவே அவருக்கு பதிலாக நியூசிலாந்து வீரர் மிட்சேல் சான்ட்னர் இந்த முக்கியமான போட்டியில் சிஎஸ்கே அணிக்கு விளையாட உள்ளதாக ருதுராஜ் தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். பிட்ச் நன்றாக இருக்கிறது. மழை வருவதற்கான சூழ்நிலை இருப்பதால் நாங்கள் அதை முதல் 2 – 3 ஓவர்கள் பயன்படுத்த பார்க்கிறோம். நாங்கள் வெற்றி பெறுவதற்கான எண்ணத்துடன் செல்கிறோம். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய போட்டியாகும். எனவே இப்போட்டி எங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நாங்கள் ஒவ்வொரு பந்தாக எடுத்துக்கொண்டு சிறிய செயல்பாடுகளில் வெற்றி பெற முயற்சிக்கிறோம்”
இதையும் படிங்க: கிரிக்கெட்டுக்கு செஞ்ச அவமானத்துக்கான விலை கொடுத்துட்டீங்க.. உங்களுக்கு இது வேணும்.. மும்பை வீரரை விளாசிய கவாஸ்கர்
“ஏற்கனவே நாங்கள் முக்கிய போட்டிகளை வென்றோம். இப்போட்டியில் மொய்ன் அலிக்கு பதிலாக சான்ட்னர் விளையாடுகிறார்” என்று கூறினார். மற்ற படி கடந்த போட்டியில் விளையாட அனைத்து வீரர்களும் இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை நிர்ணயிக்கும் இலக்கை 18.1 ஓவரில் பெங்களூரு சேசிங் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



