
இந்தியாவில் துலீப் கோப்பை 2024 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்குகிறது. அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ருதுராஜ், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரின் தலைமையில் மற்ற அனைத்து இந்திய வீரர்களும் விளையாட உள்ளனர்.
அதற்காக அறிவிக்கப்பட்ட 4 அணிகளில் தமிழகத்தில் இருந்து வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதில் நடராஜன் மட்டும் தேர்ந்தெடுக்கப்படாதது தமிழக ரசிகர்களை கோபமடைய வைத்தது. ஏனெனில் டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் 2020/21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் நெட் பவுலராக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உண்மை காரணம்:
அப்போது முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் நடராஜனுக்கு 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நன்றாகவே செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக காபா டெஸ்ட் போட்டியில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெல்வதற்கு நடராஜன் உதவினார். இருப்பினும் அதன் பின் காயத்தை சந்தித்த அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
ஆனால் அதன் பின் குணமடைந்து 4 வருடங்களாகியும் அவருக்கு மறு வாய்ப்பு கொடுக்காத தேர்வுக்குழு தற்போது சாதாரண உள்ளூர் தொடரான துலீப் கோப்பையில் கூட கழற்றி விட்டுள்ளது. இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த நடராஜன் கடந்த 3 வருடங்களாக ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அதனாலேயே தற்போது துலீப் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அஸ்வின் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நடராஜன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அற்புதமான பவுலர் என்று நான் கருதுகிறேன். இந்த வருடம் ஐபிஎல் தொடரிலும் அவர் நன்றாக விளையாடினார். இருப்பினும் கடைசியாக அவர் முதல் தர போட்டியில் 2021 ஜனவரி மாதம் 15ஆம் தேதி பிரிஸ்பேன் (காபா) நகரில் விளையாடினார். அதன் பின் கடந்த 3 வருடங்களாக அவர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடவில்லை”
இதையும் படிங்க: 10 வருஷம் தீர்க்கப்படாத கணக்கு.. அதுக்கும் சேத்து இந்தியாவை வீழ்த்துவோம்.. நேதன் லயன் மறைமுக எச்சரிக்கை
“தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் நடராஜன் உடைந்தார். நாம் அவருக்கு அதிக ஆதரவு கொடுக்கிறோம். நானும் நடராஜனை அதிகமாக விரும்புகிறேன். அவர் நல்ல பையன். ஆனால் அதை அடிக்கடி சொல்ல மாட்டேன். உண்மையில் நடராஜன் உள்ளூர் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வந்திருந்தால் இங்கு நிச்சயம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று நான் கூறுவேன்” எனக் கூறினார்.