இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் 2024/25 கோப்பை தொடரில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் எப்படியாவது இந்தியாவை வீழ்த்தும் முனைப்படும் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது. ஏனெனில் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது.
இருப்பினும் அதை விராட் கோலி தலைமையில் மாற்றிய இந்தியா 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அதற்கு பதிலடியாக 2020/21 தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியாவை 36க்கு ஆல் அவுட்டாக்கி ஆஸ்திரேலியா படுதோல்வியை பரிசளித்தது. ஆனால் அங்கிருந்து ரஹானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது.
10 வருட கணக்கு:
அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த 2 டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கும் லட்சியத்துடன் இந்தியா களமிறங்க உள்ளது. இந்நிலையில் பார்டர் – காவாஸ்கர் கோப்பையை 2016/17, 2018/19, 2020/21, 2023 ஆகிய வருடங்களில் இந்தியா தொடர்ந்து வென்றுள்ளது.
கடைசியாக ஆஸ்திரேலியா 2014ஆம் ஆண்டு தான் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றிருந்தது. எனவே 10 வருடங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் கணக்கை இம்முறை இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா தீர்க்கும் என்று நேதன் லயன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “10 வருடம் முடிவடையாத பிஸ்னஸ் உள்ளது. அது நீண்ட காலமாகி விட்டது. குறிப்பாக எங்களுடைய சொந்த மண்ணில் விஷயங்களை திருப்புவதற்கு நாங்கள் மிகவும் பசியாக இருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்”
“என்னை தவறாக நினைக்க வேண்டாம். உண்மையில் இந்தியா ஒரு முழு சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணியாகும். ஆனால் விஷயங்களை திருப்பி கோப்பையை மீண்டும் வெல்வதற்கான பசியுடன் நானும் காத்திருக்கிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்ததை விட தற்போது நாங்கள் வித்தியாசமான அணியாக இருப்பதாகவும் கருதுகிறேன்”
இதையும் படிங்க: இந்த பையன் ஒரு ரிங்கு சிங்கிற்கும்.. ஒரு ஹார்டிக் பாண்டியாவுக்கும் சமமானவன் – இந்திய முன்னாள் வீரர் கருத்து
“நாங்கள் மிகச் சிறந்த ஆஸ்திரேலிய அணியாக பயணித்து வந்துள்ளோம். தற்போது நாங்கள் ஓரளவு நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம்” என்று கூறினார். அந்த வகையில் சொந்த மண்ணில் தோற்றாலும் 2023 சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. அந்த உத்வேகத்துடன் இம்முறை சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல தயாராகியுள்ளது.



