இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருவது போன்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் டி20 கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அதில் டிஎன்பிஎல் தொடரானது தமிழ்நாட்டில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் நடைபெற்று வருவதை போன்று தற்போது கர்நாடகாவிலும் மகாராஜ் டி20 லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் மகராஜ் டி20 லீக் தொடரில் 25 வயதான மனோஜ் பாண்டகே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் அவர் பேட்டிங்கிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். நடப்பு ஆண்டு நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் 16 பந்துகளில் 42 ரன்கள் அடித்த அவர் இரண்டாவது போட்டியில் 33 பந்துகளுக்கு 58 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் தன் மீது திருப்பி உள்ளார்.
இந்நிலையில் ஆர்சிபி அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இடம் பிடித்திருந்தும் அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான டோட்டா கணேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய தேர்வாளர்கள் மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை தேடினால் நிச்சயம் அதற்கு மனோஜ் பாண்டகே சிறந்த தேர்வாக இருப்பார்.
அவரால் ரிங்கு சிங் போன்று பெரிய சிக்ஸர்களை அடிக்க முடியும். அதேபோன்று ஹார்டிக் பாண்டியா போன்று பந்துவீச்சிலும் கலக்க முடியும். ஐபிஎல் தொடரில் இரண்டு சீசன்களாக அவர் பெங்களூரு அணியில் இடம்பிடித்து இருந்தும் அவரை ஒரு போட்டியில் கூட அந்த அணி பயன்படுத்தவில்லை. இம்பேக்ட் பிளேயராக கூட அவரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க : எல்லாத்தையும் சாதிச்ச எனக்கு இந்தியாவிடம் சைலன்ட் பண்ண.. அந்த ஒன்னு தான் மிச்சமிருக்கு.. எச்சரித்த கமின்ஸ்
நிச்சயம் இனி வரும் தொடர்களில் அவரை ஏதாவது ஒரு அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணியால் 20 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட அவர் இன்றளவும் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சிலேயே அமர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.