இலங்கை டெஸ்ட் தொடரில் கபில் தேவ் ஆல்டைம் சாதனையை உடைக்கபோகும் ரவிச்சந்திரன் அஷ்வின் – என்ன தெரியுமா?

kapil dev
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. இதில் பெங்களூருவில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியின் போது இவ்விரு அணிகளும் வரலாற்றிலேயே முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடி சரித்திரம் படைக்க உள்ளன.

team-india

- Advertisement -

இந்த தொடருக்கு முன்பாக சமீபத்தில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதிலாக புதிய கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன் துணை கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்பட உள்ளார். மேலும் இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் கடந்த சில வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வந்த ரகானே, புஜாரா ஆகியோருடன் ரித்திமான் சாஹா, இஷாந்த் சர்மா போன்ற மூத்த வீரர்களும் அதிரடியாக நீக்கப்பட்டார்கள்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு ; திரும்பிய அஷ்வின்:
ஏற்கனவே 35 வயதை கடந்துவிட்ட இவர்கள் சமீப காலங்களாக சரிவர விளையாடாத காரணத்தால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருங்காலத்தில் தரமான இந்திய அணியை உருவாக்குவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த மூத்த வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளதால் ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், ஹனுமா விஹாரி, பிரியங் பஞ்சல், சௌரப் குமார் போன்ற இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்கள்.

ashwin india

அத்துடன் கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தற்போது அதிலிருந்து குணமடைந்து இந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரின் போது காயமடைந்த இந்தியாவின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரின் காயம் முழுமையாக குணமடைந்தால் மட்டுமே விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

- Advertisement -

கபில் தேவை முந்துவாரா அஷ்வின்:
அந்த வேளையில் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக மொகாலியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியினருடன் ரவிச்சந்திரன் அஸ்வினும் பந்து வீசி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனவே இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் முதல் போட்டியில் விளையாடி 5 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர்” என்ற முன்னாள் ஜாம்பவான் கபில் தேவின் ஆல்-டைம் சாதனையை உடைத்து புதிய சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைப்பார்.

kapil dev 1

கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்ட அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது இந்திய பந்துவீச்சாளர் என்ற ஹர்பஜன்சிங் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். தற்போது 430 விக்கெட்டுகளுடன் அந்தப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள அவர் 2வது இடத்தில் 434 விக்கெட்களுடன் உள்ள கபில் தேவை முந்தி சாதனைப் படைக்க இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. அதேபோல் இதே பட்டியலில் மற்றொரு ஜாம்பவான் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

கண்டிப்பாக செய்வார்:
கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட துவங்கிய அவர் அதன்பின் இதுநாள்வரை அபாரமாக செயல்பட்டு 84 போட்டிகளில் 430 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200, 250, 300, 350, 400 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளராக அவர் ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். மேலும் இதுவரை 9 தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற 2வது வீரர் என்ற பெருமையை ஜாம்பவான் ஜேக் காலிஸ் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே வாங்கலனா என்ன? சுரேஷ் ரெய்னாவை டிரேடிங் முறையில் வாங்கவுள்ள புதிய அணி – ரசிகர்கள் மகிழ்ச்சி

இன்னும் சொல்ல வேண்டுமெனில் ஐசிசி டாப் 10 டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் 9 பேர் வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்க அவர்களுக்கு மத்தியில் ஒரே ஒரு சுழல் பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார். பொதுவாகவே சொந்த மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு மிரட்டலான சுழல் பந்து வீச்சாளராக எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். அப்படிப்பட்ட நிலையில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரில் கண்டிப்பாக 5 விக்கெட்டுகளும் மேல் எடுத்து கபில்தேவ் சாதனையை அவர் முறியடிப்பார் என நம்பலாம்.

Advertisement