
நியூசிலாந்து அணிக்கு எதிராக வடோதரா நகரில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்த இந்திய அணியானது நியூசிலாந்து அணி நிர்ணயித்த 301 ரன்கள் என்கிற இலக்கினை 49 ஓவர்களிலேயே சேசிங் செய்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி பெற்ற இந்த பிரமாதமான வெற்றியின் மூலம் இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஜனவரி 14-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது வீரராக களமிறங்கி 47 பந்துகளை சந்தித்து 49 ரன்கள் குவித்திருந்தார்.
அதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் ஆகியவை அடங்கும். அதுமட்டுமின்றி நான்காவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அவர் 76 பந்துகளில் 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் அற்புதமான வெற்றிக்கு உதவியிருந்தார்.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து தனது பாராட்டினை வெளிப்படுத்தியிருந்த முன்னாள் இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது சமூக வலைதள பக்கத்தின் மூலம் கூறியதாவது : ஷ்ரேயாஸ் ஐயர் என்னை பொறுத்தவரை ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் மிஸ்டர் கன்சிஸ்டன்ட் என்று கூறுவேன்.
அவர் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் நிலையான ரன் குவிப்பை வழங்கி வருகிறார். முதலாவது ஒருநாள் போட்டியில் அவர் ஆட்டமிழந்த விதம் சற்று ஏமாற்றம் அளித்தாலும் அவர் விளையாடிய இன்னிங்ஸ் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.
இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இமாலய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – விராட் கோலி
பொதுவாக ஷ்ரேயாஸ் ஐயர் இப்படி போட்டியை முடித்து கொடுக்காமல் செல்ல மாட்டார். ஆனால் கையில் ஜேமிசன் வீசிய நல்ல பந்தில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். இனிவரும் போட்டிகளிலும் அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.