
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. முன்னதாக அத்தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் தடுமாற்றமாக விளையாடுவதால் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
2023இல் அறிமுகமான அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கத் தவறினார். அதனால அவரை கழற்றி விட்ட இந்திய அணி அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சனை புதிய ஓப்பனிங் ஜோடியாக களமிறக்கியது. அந்த வாய்ப்பில் அபிஷேக் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி அசத்தி வருகிறார். மறுபுறம் 3 சதங்கள் அடித்த சாம்சன் ஒரு வழியாக இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடித்தார்.
இருப்பினும் தற்போது திடீரென சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைக்கும் தேர்வுக்குழு டி20 அணியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்து ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது. அந்த வாய்ப்பில் கடந்த 18 போட்டிகளில் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திண்டாடி வருகிறார். இந்நிலையில் துணை கேப்டன் பதவிக்கான மரியாதைக்காக இத்தொடரில் 5 போட்டிகளிலும் கில்லுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் அந்த வாய்ப்பிலும் அதிரடியாக பெரிய ரன்கள் குவிக்கத் தவறினால் கில்லை கழற்றி விடலாம் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது, துணை கேப்டன் என்பது எனக்குக் கவலையளிக்கிறது. துணை கேப்டனை நீங்கள் எப்படி நீக்க முடியும்? அது மிகவும் கடினமானது. அதை நீங்கள் தொடரின் நடுவே செய்தாலும் சஞ்சு சாம்சனை விளையாட வைக்க முடியாது”
“ஏனெனில் துணை கேப்டனை நீக்குவது நன்றாக இருக்காது. எனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஒருவேளை 5 போட்டிகளிலும் அவர் அசத்தவில்லை என்றால், தேவையான முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்கு 2026 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான பிளேயிங் லெவன் இப்போதே தெரிய வேண்டும்”
இதையும் படிங்க: சூர்யவன்சியை வலையில் விழ வெச்சு.. இந்தியாவை சாய்க்க மலேசியாவிடம் திட்டம் இருக்கு.. கேப்டன் பேட்டி
“நமது பந்து வீச்சுத்துறை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹர்ஷித் ராணாவும் ஓரளவு அசத்துவது நல்லது. எனவே சுப்மன் கில் ரன்கள் அடிக்காவிட்டால் அவர் இருக்க வேண்டுமா அல்லது சாம்சன் விளையாட வேண்டுமா என்பதே கேள்வியாகும். அதே சமயம் சுப்மன் கில் இனிமேல் தனது இடத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பெரிய ரன்களை குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் அடிப்பதையும் நான் பார்க்க விரும்பவில்லை. அப்படி நடக்கக்கூடாது” என்று கூறினார்.