அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் இந்தியா தங்களது முதல் போட்டியில் அமீரக அணியை அதன் சொந்த மண்ணில் 234 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடுத்த போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று நல்ல ஃபார்மில் இருக்கிறது.
இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது கடைசி லீக் போட்டியில் கத்துக்குட்டியாக கருதப்படும் மலேசியாவை எதிர்கொள்கிறது. மலேசியாவைப் பொறுத்த வரை தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வெறும் 48 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 297 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 2வது போட்டியில் அமீரக அணியிடம் 78 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியா தோற்றது.
சூர்யவன்சிக்கு ஸ்கெட்ச்:
அதனால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்ட மலேசியா தங்களது கடைசி போட்டியில் இந்தியாவை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்க உள்ளது. அதற்கு முதலில் மலேசியா வைபவ் சூரியவன்சியை மடக்க வேண்டும் என்றே சொல்லலாம். ஏனெனில் 14 வயதில் அதிரடியாக விளையாடும் அவர் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்து இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார்.
இத்தொடரில் முதல் போட்டியில் அமீரகத்துக்கு எதிராக 171 ரன்கள் குவித்து தனியாளாக இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் பாகிஸ்தானிடம் 5 ரன்னில் அவுட்டானார். எனவே மலேசியாவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் அவர் பெரிய ரன்கள் குவிக்கத் தயாராகியுள்ளார். இந்நிலையில் வைபவ் சூரியவன்சியை எங்களது வலையில் விழ வைத்து இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்று மலேசியா ஃடீஸ் பட்ரோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மலேசியா கேப்டன் நம்பிக்கை
அதற்கு தேவையான திட்டமும் பவுலர்களும் தங்களிடம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “வைபவ் சூர்யவன்சி வளர்ந்து வரும் நட்சத்திரம். ஆனால் அவரை எங்களுடைய சிறந்த பவுலர்களை வைத்து வலையில் விழ வைப்பதற்கு தேவையான தந்திரோபாயங்களை நாங்கள் வகுத்துள்ளோம். எனவே நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாட உற்சாகத்துடன் உள்ளோம்”
இதையும் படிங்க: 2.4 ஓவரில் 42 ரன்ஸ்.. போதும் வெளியே போங்க.. ஆஸியில் அப்ரிடியை வெளியேற்றிய அம்பயர்.. நடந்தது என்ன?
“எங்களுடைய பவுலர்கள் சூரியவன்சியை மடக்குவதற்கு தேவையான ஃபீல்டை கொண்டிருக்கும் போது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள். அதற்காக நாங்கள் மிகவும் தீவிரமான வலைப் பயிற்சிகளையும் செய்துள்ளோம். இத்தொடரில் விளையாடுவது எங்களுக்கு பெரிய விஷயம். இதற்கு முன் மலேசியா அண்டர்-16 அணியின் கேப்டனாக இருந்த நான் தற்போது அண்டர்-19 கேப்டனாக உள்ளேன். என்னுடைய பெற்றோர்கள் இல்லாமல் இதை என்னால் சாதித்திருக்க முடியாது. டேவிட் வார்னர் என்னுடைய ரோல் மாடல்” என்று கூறினார்.



