தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் அந்தத் தொடரில் 24 போட்டிகள் கொண்ட லீக் சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதில் நடப்புச் சாம்பியன் கோவை, திருப்பூர், சேப்பாக்கம் திண்டுக்கல் ஆகிய அணிகள் தேவையான வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்தை பிடித்துள்ளன.
இதைத் தொடர்ந்து நடைபெறும் பிளே ஆஃப் சுற்றில் ஜூலை 30ஆம் தேதி குவாலிபயர் 1 போட்டியும் ஜூலை 31ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகிறது. அதில் முறையே கோவை – திருப்பூர், சேப்பாக்கம் – திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன. முன்னதாக இந்தத் தொடரில் ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் திண்டுக்கல் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை தோற்கடித்தது.
அஸ்வினுக்கே அல்வாவா:
அந்தப் போட்டியில் திண்டுக்கல் அணியன் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 15வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த ஓவரை வீசிய மோகன் பிரசாந்த் ஒரு பந்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை வீசுவதற்கு முன்பாகவே வெளியேற முயற்சிப்பதை கவனித்தார். அதனால் உடனடியாக பந்தை வீசுவதை நிறுத்திய அவர் மன்கட் ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.
ஆனால் அஸ்வின் வெள்ளைக்கோட்டுக்குள் இருந்ததால் ரன் அவுட் செய்ய முடியாத அவர் எச்சரிக்கை கொடுத்து விட்டு சென்றார். அதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்த நிலையில் வர்ணனையாளர்கள் “அஸ்வினுக்கேவா? ஒருவேளை ஸ்டம்ப்பில் அடித்திருந்தால் அஸ்வின் அவுட்டாகியிருப்பார்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனை செய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதைப் பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அனலைஸ்ட் பிரசன்னா தனது ட்விட்டரில் “எச்சரிக்கை என்ற சொல் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறி சாதகத்தை பெற முயற்சிக்கும் பேட்ஸ்மேனுக்கு மட்டுமே பொருந்தும். இங்கே அஸ்வினுக்கு அது பொருந்தும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார். அவரது கருத்தை பார்த்த ஒரு ரசிகர் “சரியாகச் சொன்னீர்கள். பந்தை ரிலீஸ் செய்யும் போது அஸ்வின் கோட்டுக்குள் இருந்தார் என்ற உண்மையை ஏன் வர்ணனையாளர்கள் சொல்லவில்லை”
இதையும் படிங்க: 34 வருடங்கள் கழித்து இந்தியாவில் நடக்கும் 2025 ஆசிய கோப்பை.. ரோஹித், விராட் விளையாட முடியாது.. காரணம் என்ன?
“அதனால் ஒருவேளை பவுலர் ஸ்டம்ப்பில் அடித்திருந்தால் கூட அஸ்வின் எப்படி அவுட்டாக முடியும்?” என்று பதிலளித்தார். அந்த ரசிகருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் “ஏனெனில் அவர்களுக்கு விதிமுறை தெரியவில்லை” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். அத்துடன் மன்கட் 38.3 விதிமுறையின் ஸ்க்ரீன் ஷாட்டையும் அஸ்வின் சேர்த்து பதிலாக கொடுத்துள்ளார். அதாவது பவுலர் மோகன் பிரசாந்துக்கும் வர்ணனையாளர்களுக்கும் மன்கட் விதிமுறை சரியாக தெரியவில்லை என்று அஸ்வின் பாடம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



