
நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி காத்திருக்கிறது. நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருப்பதினால் இந்த போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி குறித்தும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடப்போகும் வீரர்கள் குறித்தும் பல்வேறு முன்னாள் இந்திய வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இறுதி போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு சதம் அடிக்க அற்புதமான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நிச்சயம் இந்த நியூசிலாந்து அணிக்கான இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் ரன் குவிப்பார். அவருக்கு இன்னும் ஒரு அதிரடி ஆட்டம் வர வேண்டியுள்ளது. கடந்த இரண்டு ஆட்டங்களாக இரண்டு சதங்களை அவர் சற்றே தவற விட்டார் என்று நினைக்கிறேன். நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் அவருக்கு சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சரை கையாண்டது போல இம்முறை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியை அவர் அதிரடியாக எதிர் கொண்டாலே அவர் இந்த போட்டியில் சதம் அடித்து விடுவார் என அஸ்வின் தெரிவித்தார். மேலும் நியூசிலாந்து அணி குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் :
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் இந்திய அணியில் விளையாட காரணமே கம்பீர் எடுத்த அந்த முடிவால் தான் – சோயிப் அக்தர் கருத்து
பின் ஆலனுக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சில சமயம் சிக்கல் உண்டு. ஆனால் அரையிறுதி போட்டியின் போது அவர் சிறப்பாக விளையாடினார். பும்ராவை கடந்துவிட்டால் அவர்களுக்கு பெரும் உத்வேகம் கிடைக்கும். நியூசிலாந்து அணியும் ஒரு கூர்மையான அணி என்பதனால் இந்திய அணி சற்று கவனமாக அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.