IND vs AUS : கபில் தேவின் மற்றுமொரு ஆல் டைம் சாதனையை தூளாக்கிய அஷ்வின் ஜாம்பவானாக சாதனை – மேஜிக் நிகழ்த்துவாரா?

Ravichandran Ashwin Kapil Dev
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்த இந்தியாவுக்கு ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வெற்றி அவசியமாகிறது. அந்த நிலைமையில் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய முதல் போட்டியில் முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா எவ்வாறு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோ அதே போல் இந்தியாவும் குறிப்பாக பேட்டிங்கில் சொதப்பி தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே சுழலத் துவங்கிய பிட்ச்சில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தியா வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது.

ரோஹித் சர்மா 12, புஜாரா 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லபுஸ்ஷேன் 31 என முக்கிய பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ரன் குவிப்பால் 186/4 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் அனலாக பந்து வீசி அடுத்த 11 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை 197 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.

- Advertisement -

ஜாம்பவான் அஷ்வின்:
அதை தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா நேதன் லயன் 8 விக்கெட்களை சாய்த்த மாயாஜால சுழலில் புஜாரா 59 ரன்கள் எடுத்தது தவிர்த்து ஏனைய முக்கிய வீரர்கள் சொதப்பியதால் வெறும் 163 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 3வது நாளில் 75 ரன்களை துரத்த காத்திருக்கும் ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதியாகியுள்ளது. முன்னதாக இப்போட்டி துவங்கிய முதல் நாளன்றே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர முதன்மை ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசி தர வரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சனை முந்தி உலகின் புதிய நம்பர் ஒன் பந்து வீச்சாளராக சாதனை படைத்தார்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் ஏற்கனவே 450+ விக்கெட்களை எடுத்து அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராக சாதனை படைத்து நிறைய மறக்க முடியாத வரலாற்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அதே போல் பேட்டிங்கிலும் 5 சதங்கள் உட்பட 3122 ரன்களை எடுத்து கபில் தேவுக்கு நிகரான சாதனை படைத்துள்ள அவர் இதுவரை டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் முறையே 466, 151, 72 என மொத்தம் 689* விக்கெட்களை எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த 3வது இந்திய வீரர் என்ற கபில் தேவின் மற்றுமொரு சாதனையை உடைத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் 2வது இடத்தில் இருக்கும் ஹர்பஜன் சிங்கை முந்துவதற்கு இன்னும் 23 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுவதால் விரைவில் அந்த சாதனையும் அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்டியல் இதோ:
1. அனில் கும்ப்ளே : 956
2. ஹர்பஜன் சிங் : 711
3. ரவிச்சந்திரன் அஸ்வின் : 689*
4. கபில் தேவ் : 687
5. ஜஹீர் கான் : 610

அப்படி ஏற்கனவே உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இடம் பிடித்து தமிழகத்திலிருந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் அவர் ஜாம்பவான்கள் பெயர்கள் நிரம்பிய இந்த பட்டியலில் அதுவும் கபில் தேவை மிஞ்சி மீண்டும் தமிழக ரசிகர்களை பெருமடைய வைத்துள்ளார்.

இதையும் படிங்க:2019 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜடேஜா கண்ட சரிவு – இருந்தாலும் இந்த போட்டியில இப்படி பண்ணியிருக்க கூடாது

இருப்பினும் மகத்தான திறமை கொண்ட அவர் 3வது நாளில் ஆஸ்திரேலியாவை 75 ரன்கள் எடுக்க விடாமல் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி இந்தியாவுக்கு அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுப்பாரா என்பதே தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மற்றுமொரு எதிர்பார்ப்பாகும்.

Advertisement