
வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 113, அஸ்வின் 86, ஜடேஜா 56 ஜெய்ஸ்வால் ரன்கள் குவித்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் எதிர்பார்த்ததை போலவே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 149 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து ஃபாலோ ஆன் கொடுக்காமல் 227 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா 287-4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ரிஷப் 109, சுப்மன் கில் 119* ரன்கள் குவித்து 515 ரன்களை இலக்காக நிர்ணயிக்க உதவினர்.
இறுதியில் மெகா இலக்கை துரத்திய வங்கதேசம் 2வது இன்னிங்ஸில் முன்னேறிய ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 234 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சான்டோ 82 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விட்ட வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை பெற்று தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 144-6 என இந்தியா தடுமாறிய போது சதமடித்து 113 ரன்கள் குவித்த அவர் 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இந்நிலையில் சென்னையில் சிறுவயதில் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகனாக அமர்ந்து இந்திய அணியை பார்த்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட இந்திய அணிக்காக தற்போது சொந்த ஊரில் விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றது ஸ்பெஷல் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு முறையும் சென்னையில் நான் விளையாடும் போது அது எனக்கு அற்புதமான உணர்வை கொடுக்கும். இங்குள்ள ரசிகர்கள் அமரும் பகுதியிலிருந்து நான் நிறைய டெஸ்ட் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டை பார்த்துள்ளேன்”
இதையும் படிங்க: அவ்வளவு தான் இவர் கதை முடிந்தது என்று நினைத்தவர்களை திரும்பி பார்க்க வைத்த ரிஷப் பண்ட் – தரமான சம்பவம்
“தற்போது நான் செய்வதை மிகவும் என்ஜாய் செய்கிறேன். இது சண்டை செய்து வெற்றியை ஆழமாக தோண்டுவதற்கான வாய்ப்பாகும். நான் என்னுடைய ஆட்டத்தை எளிமையாக வைத்திருக்கிறேன். சதமடிக்க எனக்கு உதவிய ஜடேஜாவுக்கு நன்றி. என்னுடைய பவுலிங் வாயிலாக வாழ்க்கையை நடத்துகிறேன். எனக்கு முதலில் பவுலிங் தான் வரும். பேட்டிங்கும் இயற்கையாக வரும். கடந்த சில வருடங்களாக அதை பிரித்து எடுத்து முன்னேற்ற முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.