இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி மிகப்பெரிய காயத்தை சந்தித்திருந்தார். அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டு வந்தார். அதன் காரணமாக 2023-ஆம் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத அவர் 15 மாதங்கள் கழித்து 2024-ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றார்.
திருப்பி அடித்த ரிஷப் பண்ட் :
மிகப்பெரிய காயத்தை சந்தித்த அவர் இனி மீண்டும் களத்திற்கு எவ்வாறு திரும்புவார்? அப்படி திரும்பினாலும் அவரால் இயல்பான அதிரடி ஆட்டத்தை விளையாட முடியாது என்றெல்லாம் பலரும் பேசி வந்தனர். ஒரு மோசமான விபத்தை சந்தித்த அவர் 2024-ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்த அவர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 400 ரன்களுக்கு மேல் குவித்தார்.
அவரது இந்த சிறப்பான செயல்பாட்டை கவனித்த இந்திய அணியின் நிர்வாகம் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் வாய்ப்பினை வழங்கியது. அதிலும் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வாய்ப்பினை வழங்கியது.
இந்நிலையில் கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்தார். இப்படி அவர் கம்பேக் கொடுத்த இந்த தொடரில் அவரது ஆட்டம் எவ்வாறு இருக்கப்போகிறது? என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 52 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதன்பிறகு அவர் இரண்டாவது இன்னிங்ஸிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி 128 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 109 ரன்கள் குவித்து அசத்தினார். சர்வதேச களத்தில் மீண்டும் எவ்வாறு களமிறங்கி விளையாடப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தான் கம்பேக் கொடுத்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே அசத்தலான சதத்தை பதிவு செய்து இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் சதங்களை அடித்த விக்கெட் கீப்பர் என்ற பட்டியலில் தோனியின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க : இரண்டு இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் விராட் கோலி செய்த செயல் – இதுவரை நாம பாத்ததில்லை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 144 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள தோனி 6 சதங்களை அடித்துள்ள வேளையில் இந்த சாதனையை வெறும் 56 இன்னிங்சிலேயே சமன் செய்து தன்னை விமர்சித்தவர்களுக்கு இந்த சதத்தின் மூலம் ரிஷப் பண்ட் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



