சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இதற்கு முன் 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இத்தொடரை முழுவதுமாக தங்கள் நாட்டில் நடத்துகின்றது. அதனால் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் 2011 போலவே உலக கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு சவாலாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை விட சாதாரண இரு தரப்பு தொடர்களில் புலியாக பாய்ந்து எதிரணிகளை துவம்சம் செய்யும் இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்சிப் ஃபைனல் உட்பட ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் மட்டும் பெட்டிப் பாம்பாக அடங்கி 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக வெறும் கையுடன் வெளியேறி வருகிறது.
பெரிய ஓட்டை:
போதாக்குறைக்கு பும்ரா போன்ற தரமான வீரர்கள் காயமடைந்திருப்பதும் சுமாராக செயல்படும் வீரர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு செய்யப்படுவதும் தரமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததும் இந்திய அணியில் அரங்கேறி வருவதால் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையையும் நாம் வெல்லப் போவதில்லை என்று ரசிகர்கள் நம்பிக்கையின்றி காணப்படுகின்றனர். இந்நிலையில் 2011 உலகக் கோப்பை போல இம்முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு பேட்டிங் வரிசையில் இடது மற்றும் வலது கை வீரர்கள் இருப்பது அவசியம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
குறிப்பாக 2007இல் ஆடம் கில்கிறிஸ்ட் முதல் 2011இல் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் வரை வெற்றி கண்ட அணிகளில் இடதுகை பேட்ஸ்மேன்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் அவர் தற்போது இந்திய அணியில் இருக்கும் அந்த பிரச்சனையை ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களை வைத்து சரி செய்வது அவசியம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“அது சவாலாக இருக்கப் போகிறது. நீங்கள் தொடரை மிகவும் நெருங்கி பார்க்க வேண்டும். மேலும் வீரர்களின் ஃபார்ம் மிகவும் அவசியமாகும். அது போக நீங்கள் சரியான கலவையுடன் அணியை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்களா? என்று நீங்கள் நினைக்கலாம். என்னைப் பொறுத்த வரை ஓப்பனிங் ஜோடியில் இல்லை என்றாலும் டாப் 4 இடங்களில் அந்தக் கலவை இருக்க வேண்டும். சொல்லப்போனால் டாப் 6 பேட்ஸ்மேன்களில் இருவரை நான் இடது கை வீரர்களாக பார்க்க விரும்புகிறேன்”
“மேலும் வரலாற்றில் எப்போதுமே இடது கை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். 2011இல் உங்களிடம் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இருந்தனர். 1975, 1979இல் காளிச்சரண், பிரட்ரிக்ஸ், க்ளைவ் லாய்ட் ஆகியோர் இருந்தனர். 1983 உலக கோப்பையில் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாமல் நாங்கள் வலுவான அணிகளுக்கு எதிராக விளையாடி வெற்றி கண்டோம். 1987இல் ஆஸ்திரேலிய அணியிலும் கேப்டன் ஆலன் பார்டர் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருந்தனர். 1996இல் இலங்கை அணியில் ஜெயசூர்யா, ரணதுங்கா, குருசிங்கா ஆகியோர் இருந்தனர்”
இதையும் படிங்க:நிராகரிக்கப்பட்ட இடத்திலேயே பதவிக்கான வாய்ப்பினை பெற்றுள்ள அஜித் அகார்கர் – வெற்றிபெறவும் அதிக வாய்ப்பு
“அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியில் கில்கிறிஸ்ட், ஹெய்டன் போன்றவர்களைப் போல் தற்போது இங்கிலாந்து அணியிலும் சரியான கலவையில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். எனவே நம்முடைய அணியில் தற்போது இஷான் கிசான் இருக்கிறார். விக்கெட் கீப்பிங் துறையில் சஞ்சு சாம்சன் இருக்கிறார். ஆனால் சீனியர்களுக்கு பதில் இடது கை பேட்ஸ்மேன்கள் இடத்தை ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்றவர்களை வைத்து நிரப்புவதற்கு நம்மிடம் நிறைய தரமான இளம் வீரர்கள் இருக்கின்றனர்” என்று கூறினார்.