
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விட்டனர். அதன் காரணமாக அவர்கள் இருவரும் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாட இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 2027 உலக கோப்பை தொடரை அவர்கள் விளையாட வேண்டும் என்பதே அவர்களது இலக்காக இருந்து வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருவருமே இடம் பிடித்துள்ளனர். அந்த அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக செயல்பட இருக்கிறார். ஏற்கனவே அவர்கள் இருவரது ஓய்வு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வரும் வேளையில் இந்த தொடரே அவர்களது கடைசி தொடராக இருக்கும் என்றும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
அதோடு இந்த ஆஸ்திரேலியா தொடரில் அவர்கள் இருவரது செயல்பாடு எவ்வாறு அமையப்போகிறதோ அதனை பொறுத்துதான் அவர்கள் எதிர்காலம் இருக்கும் என்றும் பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரது எதிர்காலம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் : விராட் கோலி ஒரு சேஸிங் மாஸ்டர், ரோகித் சர்மா ஓப்பனிங்கில் மிகச்சிறப்பாக விளையாடக்கூடியவர்.
அவர்கள் இருவருமே தங்களிடம் போதுமான திறமை இன்னும் இருப்பதாக கருதுகின்றனர். அதன் காரணமாகவே அடுத்த உலக கோப்பை தொடர் வரை விளையாடி விட்டு ஓய்வு பெறலாம் என்று யோசிக்கின்றனர். அவர்களுடைய அனுபவத்திற்கு நிச்சயம் அவர்களால் இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியும்.
அதோடு தேவைப்படும் வேளையில் அவர்களின் செயல்பாடு சிறப்பாகவே இருந்து வருகிறது. என்னை பொருத்தவரை அவர்கள் இருவருமே இளம் வீரர்கள் தங்களை தள்ளுவதை உணருவார்கள். எனவே அவர்களது கடைசி கட்டத்தில் தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இதையும் படிங்க : பேருந்து பின்னாடியே போன நான் அவருக்கு எதிராகவே பந்துவீசும் அளவுக்கு வளர்ந்தேன் – வருண் சக்கரவர்த்தி கருத்து
ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர்கள் ஒருநாள் போட்டிகளில் தாங்கள் பார்மின்றி விளையாடுவதாகவவோ, மகிழ்ச்சியின்றி விளையாடுவதாகவோ நினைத்தால் நிச்சயம் அவர்களாகவே ஓய்வு பெறுவார்கள். ஆனால் இந்த ஆஸ்திரேலியா தொடருடன் அவர்கள் ஓய்வுபெற மாட்டார்கள் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.