இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளதால் தற்போது இந்திய அணியின் வீரர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் கொண்டு அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தோனி என்னுடைய பந்துவீச்சை அடித்து நொறுக்கியுள்ளார் : வருண் சக்கரவர்த்தி
டி20 போட்டிகளைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருந்த வருண் சக்கரவர்த்தி தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் தற்போது உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராகவும் மாறியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தனது பதிலை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதில் தோனியின் தீவிர ரசிகராக இருந்த அவர் சந்தித்த ஒரு நிகழ்வு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது சென்னை அணி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும், சேப்பாக்கம் மைதானத்திற்கும் இடையில் தான் என்னுடைய வீடு இருந்தது. எனவே எப்போதெல்லாம் சிஎஸ்கே அணி வீரர்கள் பேருந்தில் செல்கிறார்களோ அப்போதெல்லாம் நான் அந்த பேருந்தை பின் தொடர்ந்து செல்வேன்.
அதற்கு காரணம் தோனியை பார்க்க வேண்டும் என்பது மட்டும்தான். அப்படி இருந்த நான் அவருக்கு எதிராகவே பந்துவீசும் வரை வளர்ந்தேன். ஐபிஎல் போட்டிகளில் அவருக்கு எதிராக நான் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் அவர் பலமுறை என்னுடைய பந்துவீச்சை அடித்து நொறுக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் அதிக ரன்களை குவிக்கப்போகும் வீரர் யார்? – மைக்கல் கிளார்க் கணிப்பு
டி20 போட்டிகளை பொருத்தவரை சிறந்த வீரர்கள் என்றால் கெயில், விராத் கோலி போன்றவர்கள் தான். அந்தப் பட்டியலில் தற்போது அபிஷேக் சர்மாவும் இணைந்து இருக்கிறார். அபிஷேக் சர்மாவும் எந்த ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராகவும் தைரியமாக ரன்களை சேகரிக்கும் வீரராக இருந்து வருகிறார் என வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.



