6 மாதத்திற்குள் இந்த விஷயத்தை டிராவிட் மாத்தியே ஆகனும். இல்லனா அவ்ளோதான் – ரவிசாஸ்திரி எச்சரிக்கை

shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகியதால் இந்திய கிரிக்கெட்டின் தலைமை பொறுப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தோனிக்கு பின் இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் முழுநேர கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டபோது பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்த கூட்டணியின் கீழ் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சாதாரண தொடர்களில் இந்தியா அபாரமாக செயல்பட்ட போதிலும் ஒரு உலககோப்பையை கூட வெல்ல முடியவில்லை.

kohli

- Advertisement -

வெற்றிகரமான டெஸ்ட் கூட்டணி :
இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்கள் தலைமையில் இந்தியா சக்கைப்போடு போட்டது. குறிப்பாக பொறுப்பேற்ற 2017 முதல் விடைபெற்ற 2021 வரை தொடர்ந்து 5 ஆண்டுகள் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இவர் தலைமையில் இந்தியா வலம் வந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இந்த கூட்டணி 70 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திர சாதனை படைத்தது.

குறிப்பாக விராட் கோலி இல்லாத வேளையில் ரகானே தலைமையில் 2021இல் மீண்டும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா மீண்டும் டெஸ்ட் தொடரை வென்றது ரவி சாஸ்திரியின் சிறப்பான ஒரு பயிற்சிக்கு எடுத்துக்காட்டாகும்.

dravid

புதிய ரோஹித் – டிராவிட் கூட்டணி:
தற்போது விராட் கோலி – ரவி சாஸ்திரி என்ற தலைமை கூட்டணி போய் ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் என்ற புதிய கூட்டணி தலைமை பொறுப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட்டுக்கு ரவிசாஸ்திரி சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தரின் யூடியூப் வீடியோவில் அவர் பேசுகையில், “இது இந்திய கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான தருணம். அடுத்த 8 – 10 மாதங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ உள்ளது. அடுத்த 4 – 5 வருடங்களுக்கு இந்திய கிரிக்கெட்டை சிறப்பாக வழி நடத்தக்கூடிய வீரர்களை கண்டறியும் நேரம் இதுவாகும். இதுபோன்ற நேரங்களில் எப்போதும் இளமை மற்றும் அனுபவம் கலந்திருக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

dravid 1

இதுதான் சரியான நேரம். அடுத்த 6 மாதங்களுக்குள் சிறப்பான இளம் வீரர்களை விரைவில் தேர்வு செய்ய வேண்டும். அந்த முடிவை எடுக்க நீண்ட காலம் எடுத்து கொண்டால் பின்னாளில் அது கடினமாகிவிடும்” என கூறியுள்ள ரவிசாஸ்திரி அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைக்க கூடிய மிகப்பெரிய பொறுப்பு ராகுல் டிராவிட்டுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அணியில் இருக்கும் ஒரு சில வீரர்கள் வயதானவர்களாக இருப்பதால் அவர்களுக்கு தகுந்த இளம் வீரர்களை இப்போதே கண்டறிய நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மாற்றத்துக்கான நேரம் :
கடந்த 2011 – 2012 கால கட்டங்களில் இந்திய அணியில் இருந்த சில வீரர்கள் வயது காரணமாக ஓய்வு பெற தொடங்கினார்கள். அந்த நேரத்தில் சில மூத்த வீரர்களை அதிரடியாக நீக்கியும் இளம் வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்பையும் அளித்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி வருங்கால இந்தியாவிற்கு தேவையான மாற்றத்தை சிறப்பாக செய்தார்.

dravid 2

இதனால் கடும் விமர்சனத்திற்கு தோனி உள்ளான போதிலும் பின்னாளில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா என பல தரமான வீரர்கள் உருவானதால் இந்தியாவின் வருங்காலம் தற்போது சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோன்ற மாற்றத்தை தோனிக்கு அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி செய்வதற்குள் சர்ச்சைகளில் சிக்கி கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகிவிட்டார்.

- Advertisement -

எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட் அந்த பொறுப்பை சிறப்பாக கையாண்டு இந்தியாவின் வருங்காலத்தை நல்லபடியாக கட்டமைக்க வேண்டும் என ரவிசாஸ்திரி கேட்டுக்கொண்டுள்ளார். தற்போதைய இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது.

இதையும் படிங்க : யாரும் கவலைப்பட வேணாம். இனி இந்திய அணியை இவர் பாத்துப்பாரு – டேரன் சமி நம்பிக்கை

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா, ரகானே போன்ற வயதான வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அத்துடன் அடுத்தடுத்து உலகக்கோப்பை வர உள்ளதால் இந்திய வெள்ளை பந்து அணியிலும் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் ராகுல் டிராவிட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement