2023 உ.கோ : கொஞ்சம் மாத்தி யோசிங்க, 4வது இடத்தில் விளையாட யாருமே எதிர்பாராத – நட்சத்திர வீரரை பரிந்துரைக்கும் ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சாம்பியன் பட்டம் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்திக்கும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இருப்பினும் இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் 2 மாதங்கள் கூட இல்லாத நிலைமையில் 4வது இடத்தில் விளையாடப் போவது யார் என்ற விவாதம் 4 வருடங்களாக நீடித்து வருவது ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது என்றே சொல்லலாம்.

ஏனெனில் ராயுடுவை கழற்றி விட்டு 2019 உலக கோப்பையில் முயற்சிக்கப்பட்ட விஜய் சங்கர் முதல் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் போன்ற பல வீரர்கள் அந்த இடத்தில் காயம் மற்றும் சுமாரான ஃபார்ம் காரணமாக நிலைத்து விளையாட முடியவில்லை. இருப்பினும் கடந்த வருடம் அந்த இடத்தில் விளையாடி 2022 ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது காயத்தை சந்தித்துள்ள நிலையில் அவருக்கு பதிலான மாற்று பேக் அப் வீரர் இல்லாததே பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சாஸ்திரியின் ஐடியா:
அந்த சூழ்நிலையில் நம்பர் 4 இடத்திற்கான பிரச்சனையை தீர்க்கும் வகையிலும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத குறையை தீர்க்கும் வகையிலும் ஒரே கல்லில் 2 மாங்காய் போல வெஸ்ட் இண்டிஸ் டி20 தொடரில் அறிமுகமாகி 20 வயதிலே முதிர்ச்சியுடன் செயல்படும் திலக் வர்மாவை தேர்வு செய்ய வேண்டுமென்ற நிறைய கோரிக்கைகள் காணப்படுகின்றன. அதே போல சஞ்சு சாம்சன், இஷான் கிசான் போன்றோரும் அங்கே விளையாடினால் பிரச்சனை தீர்ந்து விடும் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்த பிரச்சனையை 2019 உலகக்கோப்பையிலேயே விராட் கோலியை 4வது இடத்தில் களமிறக்கி சரி செய்ய விரும்பியதாக தெரிவிக்கும் ரவி சாஸ்திரி தற்போது அதை செய்யலாம் என்று வித்தியாசமான ஆலோசனை தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவின் டாப் ஆர்டர் அதிக எடையுடன் இருப்பதால் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகள் விழும் போது தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கும் அவர் அதை தவிர்க்க கொஞ்சம் மாற்றி யோசித்து விராட் கோலி 4வது இடத்தில் விளையாடலாம் என கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இஷான் கிசான் டாப் ஆர்டரில் விளையாட வேண்டும். ரோகித் சர்மா அதிக அனுபவமுடையவர் என்பதால் அவரால் 3, 4வது இடத்தில் விளையாட முடியும். இவ்வாறு தான் நீங்கள் வீரர்களுக்கான இடத்தை கண்டறிய முடியும். மேலும் டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய சுப்மன் கில் 3, 4வது விளையாடுமாறு கேட்டால் என்ன நினைப்பார் என்பதையும் பார்க்க வேண்டும். ஒருவேளை 4வது இடத்தில் விராட் கோலி விளையாட வேண்டிய சூழ்நிலை உருவானால் அணிக்காக அவர் தாராளமாக விளையாடுவார்”

“இதை பற்றி கடந்த சில உலகக் கோப்பைகளின் போது நான் நினைத்தேன். அவரை 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வைப்பது பற்றி எம்எஸ்கே பிரசாத்திடம் நான் விவாதித்திருக்கிறேன். அதாவது நம்முடைய டாப் ஆர்டர் அதிக எடையுடன் இருப்பதால் 2 – 3 விக்கெட்டுகள் ஆரம்பத்திலேயே விழும் பட்சத்தில் நாம் தோற்று விடுவோம். அதை தவிர்ப்பதற்கு உங்களுக்கு அனுபவமிக்க வீரர்கள் தான் தேவை. அதே சமயம் 4வது இடத்தில் விராட் கோலியின் புள்ளி விவரங்களை பார்த்தால் அது சிறப்பாகவே இருக்கும். நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் காலத்திற்கேற்ப மாறியாக வேண்டும்”

இதையும் படிங்க:இந்நேரம் விராட் கோலி கேப்டனா இருந்திருந்தா இந்திய 2023 உ.கோ அணி 100% பிட்டா இருந்திருக்கும் – முன்னாள் பாக் வீரர் ஆதங்க பேட்டி

“அது விராட் கோலிக்கும் பொருந்தும் என்பதில் எந்த கேள்வியுமில்லை. குறிப்பாக ஸ்மித், ரூட், வில்லியம்சன் போல விராட் கோலியும் தமது கேரியரின் குறிப்பிட்ட சில சமயத்தில் சிலவற்றுக்கு உட்பட்டாக வேண்டும். தற்போது முற்றிலும் புதிய டெம்ப்ளேட் இருக்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல ஒருநாள் போட்டிகளில் தற்போது விளையாடும் 3வது இடத்தை தவிர்த்து 4வது இடத்தில் மட்டுமே விராட் கோலி சதமடித்து 39 போட்டிகளில் 55 என்ற நல்ல பேட்டிங் சராசரியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement