
சர்வதேச கிரிக்கெட்டில் இந்த நவீன யுகத்தில் சிறந்து விளங்குவதற்கு ஃபிட்னஸ் என்பது அவசியமாக பார்க்கப்படுகிறது. அதில் சிறந்து விளங்கி வெற்றிகரமாக செயல்படுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2017ஆம் ஆண்டு யோ-யோ எனப்படும் புதிய சோதனைக் கொண்டு வரப்பட்டது. வேகமாக ஓடுவது போன்ற பல்வேறு கடினமான சோதனைகளைக் கொண்ட அந்த சோதனையில் தேர்ச்சி பெறும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலைமையும் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் யோ-யோ சோதனையை அனைத்து இந்திய வீரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் புதிய கேப்டனாக இருந்ததால் முக்கிய சீனியர் வீரர்களை விராட் கோலியால் சம்மதிக்க வைக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அப்போது தோனி மொத்த இந்திய அணியையும் சம்மதிக்க வைத்ததாகவும் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற வெளிநாடுகளில் யோ-யோ சோதனை தேர்ச்சி மதிப்பெண் அதிகமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்திய அணியில் புதிது என்பதால் 16.2 என்ற குறைந்த மதிப்பை வைத்திருந்தும் முக்கிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஆச்சரியமாக இருந்ததாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“எங்களுடைய அணியை அதற்கு சம்மதிக்க வைக்க பெரிய முயற்சி தேவைப்பட்டது. ஏனெனில் எங்கள் அணியில் இருந்த நிறைய வீரர்கள் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோமா என்ற உறுதி இல்லாமல் இருந்தார்கள். அவர்கள் மகத்தான வீரர்களாகவும் இருந்தனர். ஒரு அணியில் இயற்கையான திறமையைக் கொண்ட மேட்ச் வின்னர்கள் இருக்க வேண்டும் என்பதே உங்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கும்”
“எனவே சிறந்தவர்களை தேர்ந்தெடுப்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் வேலையாகும். அதனால் ஒன்று ஃபிட்டாகுங்கள் அல்லது ஃபைக்கில் ஏறிச் செல்லுங்கள் என்பதே அணிக்கு எங்களது பொதுவான செய்தியாக இருந்தது. அந்த சூழ்நிலையில் ஒரு மீட்டிங்கில் “சரி தற்போது அனைவரும் இந்த சோதனையைச் செய்வோம்” என்று எம்எஸ் தோனி எங்கள் அணியில் வெளிப்படையாக கூறினார்”
இதையும் படிங்க: நான்சென்ஸ்.. இதை செஞ்சா போதும் இந்தியாவை அசால்ட்டா பாக் தோற்கடிக்கும்.. கவாஸ்கருக்கு கில்லஸ்பி பதிலடி
“இலங்கையின் தம்புலாவில் நடைபெற்ற அந்தத் தொடரில் தோனி கேப்டனாக இல்லை. விராட் கேப்டனாக இருந்தார். அது பெரிய யோ-யோ கிடையாது. 16.2 மட்டுமே. நியூசிலாந்து 19, ஆஸ்திரேலியா 18 கொண்டிருந்த நிலையில் நாங்கள் வெறும் 16.2 மட்டும் போதும் என்று முடிவு எடுத்தோம். ஆனால் அதுவும் எங்களின் சில வீரர்களுக்கு கடினமாக இருந்தது. அதற்கு சிலர் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் நீங்கள் இந்திய அணியில் ஒரு சிறந்த ஃபீல்டராக இருக்க விரும்பினால் இதை ஜாலியாக செய்யுங்கள் இல்லையேல் நாங்கள் வேறு வீரர்களை பார்ப்போம் என்று சொன்னோம்” எனக் கூறினார்.