அது மட்டும் சிக்ஸர் ஆனா இது மட்டும் அவுட்டா? இந்தியாவுக்கு நிகழ்ந்த அநீதி – கொந்தளித்த கவாஸ்கர், சாஸ்திரி

Ravi Shastri Catch
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் 444 என்ற சரித்திரத்தில் எட்டப்படாத பெரிய இலக்கை இந்தியா துரத்தி வருகிறது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 163, ஸ்டீவ் ஸ்மித் 121 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் 469 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா சுமாராக செயல்பட்டு வெறும் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ரகானே 89, ரவீந்திர ஜடேஜா 48, தாக்கூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆன் சந்திப்பதிலிருந்து காப்பாற்றிய நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 270/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து இந்தியாவுக்கு பெரிய இலக்கை நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 66* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

சர்ச்சை கேட்ச்:
அதை தொடர்ந்து களமிறங்க இந்தியாவுக்கு ரோகித் சர்மா 43, கில் 18, புஜாரா 27 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் விராட் கோலி 44* ரகானே 20* ரன்கள் எடுத்து போராடுவதால் 164/3 ரன்களை எடுத்துள்ள இந்தியாவின் வெற்றிக்கு கடைசி நாளில் 280 ரன்கள் தேவைப்படுகிறது. முன்னதாக இந்த போட்டியில் சுப்மன் கில் கொடுத்த கேட்ச்சை தரையோடு தரையாக கேமரூன் கிரீன் பிடித்ததை நடுவர் அவுட் என்று அறிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏனெனில் பந்துக்கு அடியில் அவருடைய கைகள் இருந்தும் 2 விரல்களுக்கு நடுவே தரையை தொட்டது தெளிவாக தெரிந்ததால் அவுட்டில்லை இன்று இந்திய ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் பந்தை பிடித்தாலும் பவுண்டரி எல்லையை தொட்டால் கேட்ச் கிடையாது சிக்சர் என்று அறிவிக்கும் நடுவர்கள் கைவிரல்களுக்கு இடையே பந்து தரையை தொட்டும் அவுட் என அறிவித்தது தவறான தீர்ப்பு என முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் எடுத்துக்காட்டுடன் அவர் விமர்சித்தது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் கேட்ச் பிடித்த பின் தரையை தொடும் தருணத்தில் பந்து களத்தை தொட்டால் அது அவுட்டில்லை. இருப்பினும் நிறைய பேர் ஃபீல்டர் கேட்ச்சை முழுமை செய்யும் போது பந்தை கையில் வைத்திருந்தார் என்று சொல்கிறார்கள். ஆனால் பந்தை காற்றில் பிடித்தால் மட்டும் கேட்ச் முழுமை என்று சொல்ல முடியாது. மாறாக பிடித்து முடிக்கும் போது பந்து முழுமையாக உங்களுடைய கட்டுப்பாட்டில் தரைக்கு மேலே இருக்க வேண்டும். எனவே இதை நீங்கள் அவுட் என்று சொன்னால் கேட்ச் பிடித்த பின் பவுண்டரி எல்லையை தொடும் போது ஏன் சிக்ஸர் என்று சொல்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

அதே போல் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த தருணத்தை பார்க்கும்போது பந்துகளுக்கு அடியில் விரல்கள் இருந்ததால் அவுட் கொடுக்கப்பட்டது என்று தெரிந்து கொண்டேன். இந்த சமயத்தில் நீங்கள் பெர்த் மைதானத்தில் விராட் கோலியை மார்னஸ் லபுஸ்ஷேன் கேட்ச் பிடித்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். அதாவது நீங்கள் காண்பித்த கோணத்தில் 3 விரல்களும் பந்துக்கு அடியில் இருக்க வேண்டும். ஆனால் இந்த தருணத்தில் பார்க்கும் போது 2 விரல்கள் மட்டுமே இருக்கிறது. அத்துடன் அவை பந்துக்கு இடையே தனித்தனியாக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTC Final : புதிய பந்துக்கு முன் அந்த ஒரு ஆஸி பவுலரை அட்டாக் செஞ்சா இந்தியா ஜெயிக்க வாய்ப்பிருக்கு – ஏபிடி கொடுத்த பிளான் இதோ

அதாவது பந்துக்கு கீழே 3 விரல்களும் இருந்தால் நிச்சயமாக தரையில் பட்டிருக்காது. மாறாக அந்த சமயத்தில் கேமரூன் கிரீன் 2 விரல்களுக்கு நடுவே பந்து தரையில் பட்டதால் அவுட்டில்லை என்று ரவி சாஸ்திரி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement