
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சந்தித்த தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு அந்தத் தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இம்முறை இந்தியா வெற்றி பெறுவதற்கு விராட் கோலி சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.
ஏனெனில் கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இதுவரை 13 போட்டிகளில் அவர் 1300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார். 2014 தொடரில் மட்டும் 4 சதங்கள் உட்பட ஆஸ்திரேலியாவில் 692 ரன்கள் குவித்து விராட் கோலி அபாரமாக விளையாடினர்.
இருப்பினும் தற்சமயத்தில் அவர் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியா என்னும் கோட்டைக்கு விராட் கோலி எனும் கிங் மீண்டும் விளையாட வந்துள்ளதாக முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். என்ன தான் சுமாரான ஃபார்மில் இருந்தாலும் விராட் கோலியை நினைத்து ஆஸ்திரேலிய அணியினர் கொஞ்சம் பயப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே இந்த தொடரின் முதல் 3 இன்னிங்ஸில் ஆரம்பத்திலேயே அவசரப்படாமல் ஒரு மணி நேரம் நங்கூரமாக விளையாடுமாறு விராட் கோலிக்கு அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார் அதை செய்தால் நிச்சயம் இத்தொடரில் விராட் கோலியால் ராஜாவாக செயல்பட முடியும் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிங் தன்னுடைய கோட்டைக்கு மீண்டும் திரும்பியுள்ளார் என்று தான் நான் ஆஸ்திரேலியாவுக்கு சொல்ல முடியும்”
“கிங் எனும் பட்டத்தை நீங்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி எதிரணியிடம் பெற்றுள்ளீர்கள். எனவே நீங்கள் பேட்டிங் செய்ய செல்லும் போது அது எதிரணியின் மனதில் இருக்கும். நீங்கள் ஆக்ரோசத்துடன் செயல்படும் போது விஷயங்கள் பின்தொடரலாம். ஆனால் விராட் கோலி அமைதியுடன் விளையாடுவதையே நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள். ஏனெனில் கோபத்துடன் முதல் அடியிலேயே நீங்கள் அவுட்டாகலாம்”
இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரை சீக்கிரம் இந்திய அணிக்குள் கொண்டு வாங்க – முன்னாள் இந்திய வீரர் ராமன் கருத்து
“எனவே பேட்டிங் செய்ய செல்லும் போது இந்த தொடரின் முதல் மூன்று இன்னிங்க்ஸில் முதல் ஒரு மணி நேரம் நீங்கள் அமைதியுடன் கவனத்துடன் விளையாடுவது மிகவும் முக்கியம். அந்த காலங்களில் நீங்கள் வேகமாக இல்லாமல் பொறுமையுடன் நிதானமாக உங்களுடைய சொந்த வேகத்தில் விளையாடினால் அனைத்தும் சரியாகி விடும்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலி நங்கூரமாக நின்று விளையாடினால் கண்டிப்பாக பெரிய ரன்கள் அடிக்கலாம்.