
இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே போல கழுத்து வலியால் கடந்த தென்னாபிரிக்க தொடரில் விளையாடாத சுப்மன் கில்லும் கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதனால் திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்கள். அதில் கடந்த தென் ஆப்பிரிக்க தொடரில் நீண்ட காலம் கழித்து கம்பேக் கொடுத்த ருதுராஜ் 2வது போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
அப்படி இருந்தும் அடுத்ததாக நடைபெறும் நியூஸிலாந்து தொடரில் அவருக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இத்தனைக்கும் 2025/26 விஜய் ஹசாரே கோப்பையில் ருதுராஜ் 38*, 124, 66 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு நியூசிலாந்து தொடரில் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்காதது பல ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
இந்நிலையில் நன்றாக விளையாடியும் வாய்ப்பு கிடைக்காத ருதுராஜ் கெய்க்வாட்டை நினைத்து எவ்வளவு வருத்தப்பட்டாலும் போதாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகப்படியான போட்டி மிகுந்த இந்திய அணியில் இடமில்லாத காரணத்தாலேயே அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார். எனவே மீண்டும் சிறப்பாக விளையாடி ருதுராஜ் கம்பேக் கொடுப்பார் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அஸ்வின் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நீங்கள் எவ்வளவு வருத்தப்பட்டாலும் பரவாயில்லை. எழுந்திருங்கள், உடையை அணியுங்கள், உபகரணங்களை அணியுங்கள், நான் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்பதைக் காண்பியுங்கள். அணியில் இடத்தைத் தவற விடுவது கடினமானதாக இருக்கலாம்”
இதையும் படிங்க: முகமது சிராஜை மீண்டும் ஒருநாள் அணியில் சேர்த்ததே இதற்காக தான் – நிர்வாகம் போட்டுள்ள ஸ்கெட்ச்
“அந்தளவுக்கு இந்திய அணியில் இடத்திற்கு மிகப்பெரிய போட்டி நிலவுகிறது. ருதுராஜ் கெய்க்வாட்” என்று பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் 2026 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக விளையாட உள்ளார். அந்தத் தொடரில் அவர் பெரிய ரன்கள் குவித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்து இந்திய அணியிலும் கம்பேக் கொடுக்க முயற்சிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.