இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை பொருத்தவரை அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. அவ்வப்போது ஒரு சில தொடர்களில் மட்டுமே இடம்பெற்று விளையாடி வருகிறார்.
முகமது சிராஜை ஒருநாள் அணியில் சேர்க்க இதுவே காரணம் :
ஆனால் திறமை வாய்ந்த முகமது சிராஜிக்கு மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் கொடுக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த வேளையில் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்து 2019-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான முகமது சிராஜ் இதுவரை 47 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்நிலையில் இப்படி மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கு முகமது சிராஜை கொண்டு வருவதற்கு காரணமே 2027 ஒருநாள் உலக கோப்பை தொடர் தான் என்று தெரிகிறது. ஏனெனில் இந்திய அணியின் நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 உலக கோப்பை தொடரில் விளையாட வைக்க திட்டமிட்டே அவரை அணிக்குள் கொண்டு வந்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஏனெனில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலககோப்பை தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளையாடப்போகும் வேளையில் அவருக்கு உறுதுணையாக ஒரு அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் ஏற்கனவே முகமது ஷமி அணியின் நிர்வாகத்தால் ஓரம் கட்டப்பட்டு வரும் வேளையில் அவருக்கு அடுத்து இந்திய அணியில் அனுபவ வீரராக இருக்கும் முகமது சிராஜ் பும்ராவுடன் சரியான ஜோடியாக இருப்பார் என்பதாலும் நிர்வாகம் இந்த திட்டத்தை செயல்படுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : நியூசிலாந்து தொடரில் இடம் பிடித்திருந்தாலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை – விவரம் இதோ
டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தும் முகமது சிராஜ் ஏற்கனவே தனக்கு கிடைக்கும் வெகு சில வாய்ப்புகளில் எல்லாம் ஒருநாள் போட்டிகளிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர் அடுத்த 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் இருந்து வருகிறது.



