இதுக்கு முன்னாடி நாங்க இந்தியாவுக்கு யாருன்னு காட்டிட்டோம்.. எச்சரிக்கையுடன் டுஷன் பேட்டி

Rassie Van Der Dussan
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 1ஆம் தேதி புனே நகரில் நடைபெற்ற போட்டியில் வலுவான நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா டீ காக் 114, வேன் டெர் டுஷன் 133 ரன்கள் அடித்த உதவியுடன் 358 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33.5 ஓவரில் 167 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 60 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முன்னதாக இத்தொடரில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடும் தென்னாப்பிரிக்கா இதுவரை 79 சிக்சர்கள் அடித்து ஒரு உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக உலக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இந்தியாவுக்கு எச்சரிக்கை:
அத்துடன் பெரும்பாலான போட்டிகளில் அசால்டாக 350 – 400 ரன்கள் அடித்துள்ள அந்த அணி நெதர்லாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியை தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் இந்தியாவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த வகையில் தங்களுடைய முதல் உலகக்கோப்பையை வெல்லும் லட்சியப் பயணத்தில் மிரட்டும் தென்னாப்பிரிக்கா அடுத்ததாக நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

ஆனால் இந்தியா சொந்த மண்ணில் முதல் 6 போட்டிகளிலும் வென்று அதிரடியாக செயல்பட்டு வருவதால் தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதற்கு முன் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததைப் போல் இம்முறையும் நாங்கள் வெல்வோம் என்று தென்னாப்பிரிக்க வீரர் ராசி வேன் டெர் டுஷன் சவாலை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி நியூசிலாந்து வெற்றிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது மிகப்பெரிய போட்டியாகும். நிறைய விளையாடியுள்ள அவர்கள் அணியில் ஏராளமான அனுபவம் இருக்கிறது. குறிப்பாக அவர்களிடம் சிறந்த பவுலிங் அட்டாக் மற்றும் பேட்டிங் வரிசை இருப்பதால் அனைத்தும் பூர்த்தியடைந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் அப்போட்டியில் நாங்கள் செய்ய விரும்புவதை வழக்கம் போல செய்தால் எங்களால் வலுவான நிலையை எட்ட முடியும் என்பதை அறிவோம்”

இதையும் படிங்க: ப்ளீஸ் நீங்க தான் குவிண்டன் டி காக் கிட்ட பேசனும். அவரை போக வேணாம்னு சொல்லுங்க – முகமது கைப் கோரிக்கை

“கண்டிப்பாக அந்த போட்டியில் மிகப்பெரிய சவாலும் அழுத்தமும் இருக்கும். நாங்களும் அதை தான் எதிர்பார்க்கிறோம். அதை விட இதற்கு முன் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக இங்கே விளையாடி அவர்களை தோற்கடித்துள்ளோம்” என்று கூறினார். அதாவது கடைசியாக 2016 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 ஒருநாள் தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. அப்படி சமமான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் தென்னாப்பிரிக்கா இம்முறையும் இந்தியாவை வீழ்த்தும் என்று அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement