இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய வேளையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் மீண்டும் 6 வெற்றிகளுடன் முதலிடத்தினை பிடித்துள்ளது.
இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவிக்க பின்னர் 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 167 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சார்பாக இரண்டு வீரர்கள் சதம் அடித்து அசத்தியிருந்தனர். அதிலும் குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரரான குவிண்டன் டி காக் 116 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 114 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்த உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தான் இந்த தொடருடன் ஓய்வு பெற இருக்கிறேன் என்று அறிவித்த அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதுவரை அவர் இந்த உலககோப்பை தொடரில் விளையாடியுள்ள 7 ஆட்டங்களில் 4 சதங்களுடன் முதல் தென்னாப்பிரிக்க வீரராக ஒரே உலகக்கோப்பை தொடரில் 500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அதோடு இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர் நேற்றும் நியூசிலாந்து அணிக்கெதிராக அற்புதமான சதத்தை விளாசியிருந்தார்.
இந்நிலையில் அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றினை பகிர்ந்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் : இந்த உலகக்கோப்பை தொடரில் குவிண்டன் டி காக் நான்காவது சதம் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தான் அவரை சமாதானம் செய்து தொடர்ச்சியாக விளையாட வைக்க வேண்டும். இந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வுபெற வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்.
இதையும் படிங்க : காலவரையின்றி வெளியேறிய நட்சத்திர வீரர்.. காயத்தால் முக்கிய வீரரும் விலகல்.. ஆஸிக்கு அடுத்தடுத்த பின்னடைவு
அவரைப் போன்ற ஒரு ஸ்டைலிஷ் ஆன இடதுகை ஆட்டக்காரர் தொடர்ந்து விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்று அவர் தனது கருத்தினை டிவிட்டர் பக்கத்தின் மூலம் கோரிக்கையை முன் வைத்துள்ளார். ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட குவிண்டன் டி காக் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று டி20 லீக் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.