இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள லீக் சுற்றில் மிகச்சிறப்பாக செயல்பட்டு நாக் அவுட் சுற்றுக்கு செல்வதற்கான போட்டி அனைத்து அணிகளிடமும் காணப்படுகிறது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமாக அணியாக திகழும் ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சரிந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
ஆனாலும் அதற்கடுத்து தொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெற்ற அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைந்து தங்களை வலுவான சாம்பியன் அணி என்பதை நிரூபித்து வருகிறது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளுக்கு டாப் ஆர்டரில் விளையாடும் டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ் ஆகிய துவக்க வீரர்களின் அதிரடியான ஆட்டமே முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.
காலவரையின்றி வெளியேற்றம்:
இவர்களுடன் கடந்த போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து இணைந்த டிராவிஸ் ஹெட் சதமடித்ததால் நியூசிலாந்துக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா மீண்டும் முழு பலத்தை பெற்றது அந்நாட்டு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பையிலிருந்து நட்சத்திர வீரர் மிட்சேல் மார்ஷ் திடீரென விலகி நாடு திரும்பியுள்ளதாக ஆஸ்திரேலிய வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக சொந்த காரணங்களுக்காக இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள அவர் எப்போது அணியுடன் மீண்டும் இணைவார் என்று தங்களுக்கே தெரியாது எனவும் ஆஸ்திரேலியா வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது காலவரையின்றி வெளியேறியுள்ள மிட்சேல் மார்ஷ் இந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் கூட விளையாடுவது சந்தேகமாகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவர் 2021 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர். இது போக காயத்திலிருந்து குணமடைந்து வந்த கிளன் மேக்ஸ்வெலும் பயிற்சி எடுக்கும் போது மீண்டும் காயமடைந்ததால் நவம்பர் 4ஆம் தேதி கொல்கத்தாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் முக்கிய போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அசால்ட்டாக 350 ரன்களை அடித்து தள்ளும் தெ.ஆ புதிய தனித்துவ உலக சாதனை.. அடுத்த மேட்ச்சில் இந்தியா தாங்குமா?
இப்படி நாக் அவுட் சுற்று நெருங்கும் நேரத்தில் 2 முக்கியமான வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று தெரிய வருவது ஆஸ்திரேலிய அணிக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த சூழ்நிலையில் மார்க்கஸ் ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன் போன்ற ஆல் ரவுண்டர்கள் அந்த 2 வீரர்களுக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.