ரோஹித் தப்பா சொல்லிட்டாரு, அஷ்வின் அவ்ளோ ஒர்த் இல்ல – ஒப்புக்கொள்ள மறுக்கும் முன்னாள் பாக் வீரர்

latif
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை இந்தியா சுவைத்தது. இதன் வாயிலாக 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 12ஆம் தேதியன்று பெங்களூருவில் துவங்க உள்ளது. இந்தப் போட்டியிலும் இலங்கையை தோற்கடித்து 2 – 0 என்ற கணக்கில் மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராட்டு மழையில் அஷ்வின்:
முன்னதாக கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த இந்த தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்தார். இந்தியா கண்ட மகத்தான ஆல்-ரவுண்டராக கருதப்படும் ஜாம்பவான் கபில்தேவ் 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகளை எடுத்து இதுநாள் வரை அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். ஆனால் தற்போது வெறும் 85 போட்டிகளில் 436 விக்கெட்டுகளை எடுத்துள்ள அஷ்வின் அவரை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்துள்ளார்.

Ashwin

ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில்தேவ் ஒரு மிகப் பெரிய ஜாம்பவானாக உலக அளவில் அனைவராலும் போற்றப்படுகிறார். அப்படிப்பட்ட அவரின் சாதனையை உடைத்துள்ளதால் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் பாராட்டு மழையில் ரவிச்சந்திரன் அஸ்வின் நனைந்து வருகிறார். சொல்லப்போனால் இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த கபில்தேவ் நேரடியாக தனது கையொப்பமிட்ட பூங்கொத்தை அவரின் வீட்டுக்கு பரிசாக அனுப்பி வைத்து பாராட்டினார்.

- Advertisement -

மறுக்கும் ரசித் லதீப்:
குறிப்பாக அஷ்வினை பாராட்டும் வகையில் அந்த போட்டி முடிந்த பின்னர் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா கூறியது பின்வருமாறு. “எனது கண்களில் அவர் ஒரு ஆல்-டைம் சிறந்த பந்துவீச்சாளராக தோன்றுகிறார். அவர் கடந்த பல வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக பல வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். நிறைய மேட்ச் வின்னிங் செயல்பாடுகளை கொடுத்துள்ள அவர் தலைசிறந்த ஒருவராக எனக்கு தோன்றுகிறார். அவரைப் பற்றி நிறைய பேருக்கு பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை அவர் ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளர்” என மனதார பாராட்டினார்.

Ashwin

ஆனால் ரோகித் சர்மாவின் இந்த கருத்துக்களை பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் ரசித் லதீப் மறுத்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அஷ்வின் ஒரு நல்ல பவுலர். அவர் தனது பந்து வீச்சில் நிறைய வகைகளை வைத்துள்ளார். குறிப்பாக சொந்த மண்ணில் எஸ்ஜி பந்தில் அவரை விட வேறு ஒரு நல்ல சுழல்பந்து வீச்சாளர் இந்தியாவில் கிடையாது. ஆனால் வெளிநாடுகளைப் பொறுத்தவரை ரோகித் சர்மாவின் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அங்கே அனில் கும்ப்ளே தான் சிறந்து விளங்கினார். வெளிநாடுகளில் கும்ப்ளே மிகச் சிறப்பாக செயல்பட்டார். தற்போதைய காலத்தில் ரவீந்திர ஜடேஜா வெளிநாடுகளில் சிறந்து விளங்குகிறார். அந்த காலத்தில் பிஷன் சிங் பேடி சிறப்பாக செயல்பட்டார்” என கூறினார்.

- Advertisement -

ரோஹித் தப்பா சொல்லிட்டாரு:
“இந்திய மண்ணில் மட்டும் பார்க்கும் போது அஷ்வின் ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அப்படிப்பட்ட வேளையில் அவரைப்பற்றிய ரோகித் சர்மா கூறியது நாக்கு தவறி வந்த வார்த்தைகள் என நான் கருதுகிறேன். அது தனது அணியில் உள்ள ஒரு வீரருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளாக மட்டுமே நான் பார்க்கிறேன்” என இதுபற்றி மேலும் தெரிவித்த ரசித் லதீப் அஸ்வின் பற்றிய ரோகித் சர்மா கூறிய வார்த்தைகள் வாய்தவறி வந்த ஒன்றாக கருதுகிறேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இலங்கை 2வது டெஸ்ட் : சச்சின், தோனி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து சாதனை படைக்கபோகும் ரோஹித் சர்மா

இந்தியாவில் இருக்கும் ஆகாஷ் சோப்ரா போன்ற ஒரு சில முன்னாள் வீரர்கள் கூட வெளிநாடுகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் சரிப்பட்டு வரமாட்டார் என கூறி வருகிறார்கள். தற்போது அந்த பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரசித் லதீப் இணைந்துள்ளார். அவர் கூறுவது போல் ஆரம்ப காலங்களில் வெளிநாடுகளில் அஸ்வின் தடுமாறியது உண்மைதான் என்றாலும் சமீபகாலங்களாக அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபித்துள்ளார். இருப்பினும் கூட அவர் மீது அந்த அவப்பெயர் இன்னும் இருந்து கொண்டே வருவது தமிழக ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது.

Advertisement