இலங்கை 2வது டெஸ்ட் : சச்சின், தோனி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து சாதனை படைக்கபோகும் ரோஹித் சர்மா

Rohith-2
- Advertisement -

இந்தியா – இலங்கை அணிகள் மோதி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதல் போட்டியின் முடிவில் 1 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த மார்ச் 4ஆம் தேதி சொந்த மண்ணில் துவங்கிய இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இலங்கையை பந்தாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

INDvsSL

- Advertisement -

இதை அடுத்து இவ்விரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 12ஆம் தேதியன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் துவங்க உள்ளது. அந்த போட்டியின் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் ஒரு பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி புதிய சரித்திரம் படைக்க உள்ளன.

கலக்கும் ரோஹித் சர்மா:
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்த விராட் கோலி திடீரென அந்த பதவியில் இருந்து விலகினார். அதன் காரணமாக புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் இந்த இலங்கை தொடர் முதல் இந்தியா தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளது.

Rohith

கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக முழு நேர டி20 கேப்டனாக பொறுப்பேற்ற அவரிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியும் ஒப்படைக்கப்பட்டது. அப்போது நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த வைட்வாஷ் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்தார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அபாரமாக கேப்டன்ஷிப் செய்ய துவங்கியுள்ள அவர் முதல் போட்டியிலேயே இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்ததன் காரணமாக 65 ஆண்டுகளுக்குப் பின் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த 2-வது இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையும் படைத்தார்.

- Advertisement -

400வது போட்டியில் ஹிட்மேன்:
இந்நிலையில் மார்ச் 12ஆம் தேதியன்று பெங்களூருவில் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 400வது போட்டியில் விளையாடும் 9-வது இந்திய வீரர் என்ற புதிய சாதனையையும் படைக்க உள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியாவிற்காக முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அதன்பின் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பையில் அறிமுகமாகி அந்த உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். இருப்பினும் ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய அவர் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் அடிக்கடி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Rohith

ஆனாலும் தொடர்ந்து முயற்சித்து வந்த அவர் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். ஆரம்ப கால கட்டங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அவரின் திறமையை பார்த்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி இவர் ஓப்பனிங் இடத்துக்கு தான் சரிப்பட்டு வருவார் என்பதை கணித்து ஷிகர் தவனுடன் ஓபனிங் ஜோடியாக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார். அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய ரோகித் சர்மா அதன்பின் விஸ்வரூபமெடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், 2019 ஒரே உலக கோப்பையில் 5 சதங்கள் உட்பட பல சாதனைகளை படைத்து ஹிட்மேன் என ரசிகர்களிடையே பெயரை வாங்கி கடந்த 2019க்கு பின் ஒருவழியாக 3 வகையான இந்திய அணியிலும் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார்.

ஜாம்பவான்களுடன் இணையும் ஹிட்மேன்:
இடையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபாரமாக செயல்பட்ட அவர் 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்த காரணத்தால் இன்று 3 வகையான இந்திய அணிக்கு கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இதுநாள் வரை 44 டெஸ்ட், 230 ஒருநாள் மற்றும் 125 டி20 என 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 399 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள அவர் பெங்களூருவில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் போது 400 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 9-வது இந்திய வீரராக சாதனை படைப்பார்.

rohitsachin

இதன் வாயிலாக இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், எம்எஸ் தோனி போன்ற ஜாம்பவான்களுடன் தன்னையும் ரோகித் சர்மா இணைத்துக்கொண்டு பெருமையடைய உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 400 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களின் பட்டியல் இதோ:
1. சச்சின் டெண்டுல்கர் : 664 போட்டிகள்
2. எம்எஸ் தோனி : 538 போட்டிகள்
3. ராகுல் டிராவிட் : 509 போட்டிகள்
4. விராட் கோலி : 457 போட்டிகள்
5. முகமது அசாருதீன் : 433 போட்டிகள்
6. சவுரவ் கங்குலி : 424 போட்டிகள்
7. அனில் கும்ப்ளே : 403 போட்டிகள்
8. யுவராஜ் சிங் : 402 போட்டிகள்
9. ரோஹித் சர்மா : 400* போட்டிகள்

Advertisement