கதை முடிஞ்சுன்னு நினைச்சப்போ 7வது இடத்தில் களமிறங்கி டெல்லியை அதிர விட்ட இளம் தமிழக வீரர் – ரஞ்சி ட்ராபியில் அபாரம்

Ranjan Pradosh Paul Ranji
- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பையின் லீக் சுற்று பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதிய 57வது லீக் போட்டி டெல்லியில் இருக்கும் புகழ் பெற்ற அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 27ஆம் தேதியன்று துவங்கியது. முன்னதாக இத்தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிராக கடுமையாக போராடியும் ட்ராவை சந்தித்த தமிழகம் ஆந்திராவுக்கு எதிரான 2வது போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் நாக் அவுட் சுற்றுக்கு செல்ல இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய தமிழ்நாடு டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி தமிழகத்தின் சிறப்பான பந்து வீச்சில் 303 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் துருவ் சோறே 66 ரன்களும் சித்து 57 ரன்களும் விஜயரன் 58 ரன்களும் லலித் யாதவ் 40 ரன்களும் எடுத்த நிலையில் தமிழகம் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் வாரியர் மற்றும் லட்சுமி நாராயணன் விக்னேஷ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாட்டுக்கு சாய் சுதர்சன் 25, ஜெகதீசன் 34 என முக்கிய வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

- Advertisement -

அபார சதம்:
அதனால் 76/2 என தடுமாறிய தமிழகத்துக்கு 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த அபாரஜித் சகோதரர்களில் பாபா அபாரஜித் 8 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்து வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அசத்திய கேப்டன் பாபா இந்திரஜித் 9 பவுண்டரியுடன் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் 200/5 என மீண்டும் தடுமாறிய போது களமிறங்கிய விஜய் சங்கருடன் 7வது பேட்ஸ்மேனாக வந்த இளம் வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் நங்கூரமாக நின்று ரன்களை சேர்த்தார்.

6வது விக்கெட்டுக்கு முக்கியமான 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லியின் ஸ்கோரை சமன் செய்த இந்த ஜோடியில் விஜய் சங்கர் 52 ரன்களில் அவுட்டானதும் அடுத்ததாக டெயில் எண்டர்கள் இருந்தால் தமிழ்நாடு விரைவாக ஆல் அவுட்டாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து வந்த சாய் கிசோர் 4 ரன்னில் அவுட்டானாலும் நான் இருக்கும் வரை கவலை வேண்டாம் என்ற வகையில் பேட்டிங் செய்த ரஞ்சன் பால் மற்றொரு டெயில் எண்டர் அஷ்வின் கிறிஸ்ட் உடன் ஜோடி சேர்ந்து முக்கியமான ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

குறிப்பாக 8வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லியை திணறடித்த இந்த ஜோடியில் ஏற்கனவே அரை சதம் கடந்திருந்த ரஞ்சன் பால் நேரம் செல்ல செல்ல சிறப்பாக செயல்பட்டு சதமடித்தார். இதுவரை உள்ளூர் கிரிக்கெட்டில் சதமடிக்காத அவர் முதல் முறையாக சதமடித்ததால் அதை வெறித்தனமாக துள்ளி குதித்துக் கொண்டாடினார். இறுதியில் 16 பவுண்டரியுடன் 124 ரன்கள் குவித்த அவருடன் அஷ்வின் கிறிஸ்ட் 32* ரன்கள் எடுத்ததால் 427/8 ரன்கள் எடுத்திருந்த போது தமிழகம் தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

டெல்லி சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 124 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வரும் டெல்லி சற்று முன் வரை 203/4 ரன்கள் குவித்து 79 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் தமிழக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு டெல்லியின் ஸ்கோரை சமன் செய்வதற்கு மட்டுமே உதவிய நிலையில் கடைசி நேரத்தில் 7வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்து 400 ரன்கள் குவிப்பதற்கு முக்கிய பங்காற்றிய இளம் வீரர் ரஞ்சன் பிரதோஷ் தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: அதுக்குள்ள அவர் செய்த நன்றியை மறந்துட்டிங்கள்ள, பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவை விளாசிய கரீம் – காரணம் இதோ

திருப்பூரைச் சேர்ந்த இவர் சமீப காலங்களில் டிஎன்பிஎல் தொடரில் கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடி பெற்றுள்ள இந்த வாய்ப்பில் முதல் முறையாக சதமடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement