நீங்க இங்க வந்தா தான் நாங்க அங்க வருவோம். இல்லனா உங்களுக்கு தான் லாஸ் – இந்தியாவை எச்சரித்த ரமீஸ் ராஜா

Ramiz Raja
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாக் அவுட் சுற்றுடன் வெளியேறினாலும் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் அசாத்தியமாக தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து இது போன்ற உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை மட்டும் மோதி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை உட்பட இந்த வருடம் 3 முறை மோதிய இவ்விரு அணிகளும் அடுத்ததாக 2023இல் மோதுகின்றன.

VIrat Kohli IND vs PAK.jpeg

- Advertisement -

குறிப்பாக வரலாற்றின் 16வது ஆசிய கோப்பை அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடத்துவதற்கான உரிமையை அந்நாட்டு வாரியம் வாங்கியுள்ளது. ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு பயணித்து 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தத்தை கொடுப்போம் என்று கடந்த மாதம் அறிவித்தார். ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் அவரது தலைமையில் நடைபெற்ற ஆசியக் கூட்டத்தில் ஆசிய கோப்பை நடத்தும் உரிமையை வாங்கியும் கடைசி நேரத்தில் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் ஜெய் ஷா இப்படி பேசியுள்ளது ஏமாற்றத்தைக் கொடுப்பதாக பாகிஸ்தான் வாரியம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

நஷ்டம் உங்களுக்கே:

அத்துடன் எங்கள் நாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்க வரவில்லை என்றால் உங்கள் நாட்டில் நடைபெறும் 2023 உலகக்கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்றும் பாகிஸ்தான் வாரியம் பதிலடி கொடுத்திருந்தது. ஆனால் ஆசிய கவுன்சில் வருமானத்தை இலங்கை, பாகிஸ்தான் போன்ற இதர நாடுகள் பங்கு போடும் நிலையில் இந்தியா மட்டும் அதற்கு நிதியுதவி அளிக்கும் நாடாக இருப்பதால் பிசிசிஐ முடிவை யாராலு மாற்ற முடியாது என்று வல்லுநர்கள் தெரிவித்தார்கள்.

IND vs PAK Babar Azam Rohit Sharma

அத்துடன் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்காமல் போனால் அதற்காக கிடைக்கும் பங்கு பணமும் கிடைக்காமல் போய்விடும் என்பதால் இந்த விஷயத்தில் இந்தியாவை அனுசரித்துச் செல்மாறு ஆகாஷ் சோப்ரா, டேனிஷ் கனேரியா போன்ற இருநாட்டு முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் வாரியத்திற்கு நிதர்சனத்தை எடுத்துரைத்தார்கள். இந்நிலையில் ஆசிய கோப்பையில் பங்கேற்காவிட்டால் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா அறிவித்துள்ளார். மேலும் உலகின் டாப் அணியாக விளங்கும் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால் 2023 உலக கோப்பையை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று தெரிவிக்கும் அவர் அதனால் இந்தியாவுக்கே நஷ்டம் ஏற்படும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காவிட்டால் பின்னர் அதை யார் பார்ப்பார்கள்? எங்கள் நாட்டுக்கு இந்தியா வந்தால் மட்டுமே உலகக்கோப்பையில் பங்கேற்க அவர்களது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஒருவேளை அவர்கள் எங்களது நாட்டுக்கு வரவில்லை என்றால் நாங்கள் இல்லாமல் அவர்கள் உலக கோப்பையை நடத்தும் நிலை நேரிடும். ஆனால் உலகிலேயே எங்களது அணி அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது”

VIrat Kohli Ramiz Raja

“எப்போதுமே பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று நான் சொல்வேன். உங்களது அணி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அது நடைபெறும். 2021 டி20 உலக கோப்பையில் நாங்கள் இந்தியாவை தோற்கடித்தோம். ஆசிய கோப்பையிலும் அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அந்த வகையில் ஒரு வருடத்தில் மில்லியன் டாலர் இந்திய அணியை இருமுறை நாங்கள் வீழ்த்தியுள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க : INDvsNZ : ஷிகார் தவான் எடுத்த அந்த தவறான முடிவு தான் மோசமான தோல்விக்கு காரணம் – வாசிம் ஜாபர் கருத்து

அதாவது பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடும் என்பது போல் பாகிஸ்தான் பங்கேற்க விட்டால் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக்கோப்பை ஃபிளாப் ஆகிவிடும் என்று ரமீஸ் ராஜா எச்சரித்துள்ளார். அவருக்கு இந்திய ரசிகர்கள் தகுந்த பதிலடி கொடுத்த வரும் நிலையில் பிசிசிஐ என்ன பதில் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement