கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் சற்று தடுமாற்றமான துவக்கத்தையே சந்தித்துள்ளது. ஏனெனில் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் அவர்கள் தங்களது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியை தழுவினர்.
எங்களது அணி இந்த வருஷம் தடுமாற இதுவே காரணம் : ரமன்தீப் சிங்
அதற்கடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் நேற்று மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே இரண்டு தோல்விகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதிலும் குறிப்பாக நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 116 ரன்களை மட்டுமே குவித்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதன்காரணமாகவே கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்திருந்தது. கடந்த ஆண்டு வரை மிக பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட கொல்கத்தா அணி இப்படி ஒரேடியாக சரிவை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து அந்த அணியின் நட்சத்திர வீரரான ரமன்தீப் சிங் சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
எங்களுடைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இம்முறை தடுமாற்றத்தை சந்தித்து வருவதற்கு மிகப்பெரிய காரணமே மெகா ஏலம் தான். ஏனெனில் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு நல்ல காம்பினேஷன் கொண்ட அணியாக மிகச் சிறப்பாக விளையாடி வந்தோம். ஆனால் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை அணி மாறும்போது நாங்கள் அமைத்து வைத்திருந்த காம்பினேஷன் முற்றிலும் மாறுகிறது.
அந்த மாற்றத்தினால் மீண்டும் ஒரு அணியாக நாங்கள் ஒன்றிணைய காலஅவகாசம் தேவைப்படுகிறது. மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது நாங்கள் தோல்வியை சந்திக்க பேட்டிங் ஃபெயிலியர் மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இந்த மைதானத்தில் நிச்சயம் 180 முதல் 190 ரன்கள் வரை குவித்திருக்க வேண்டும். ஆனால் பவுன்ஸ் மற்றும் வேகம் ஆகியவை அதிகமாக இருந்ததால் எங்களால் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியாமல் போனது என ரமன்தீப் சிங் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா இடத்தில் நான் இருந்திருந்தா இப்படி விட்டிருக்க மாட்டேன்.. அஸ்வனி குமாருக்கு – ஹர்பஜன் ஆதரவு
அவர் கூறியது போன்று மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கடந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் கடந்த ஆண்டு முடிந்த பின்னர் அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், மிட்சல் ஸ்டார்க், நிதீஷ் ராணா, பில் சால்ட் ஆகியோர் மெகா ஏலத்தில் மற்ற அணிகளுக்கு சென்றது அவர்களுக்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



