கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் 23 வயதான இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அஸ்வனி குமார் அறிமுகமானார். அவருக்கு கிடைத்த இந்த முதல் வாய்ப்பிலேயே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதினையும் பெற்று அசத்தியிருந்தார்.
அஸ்வனி குமாருக்கு நடந்தது அநியாயம் : ஹர்பஜன் சிங்
அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது பந்துவீசிய அவர் தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானேவை வீழ்த்தி சாதனை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து ரிங்கு சிங், மனிஷ் பாண்டே, ஆண்ட்ரே ரசல் என நட்சத்திர வீரர்கள் அனைவரையும் வீழ்த்தி 3 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இப்படி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு ஹார்டிக் பாண்டியா நான்காவது ஓவரை வழங்காமல் அவருடைய ஸ்பெல்லை அப்படியே முடித்தார். இந்த விவகாரம் தான் தற்போது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் அறிமுக போட்டியிலேயே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய வீரராக ஐபிஎல் தொடரில் சாதனை நிகழ்த்தியுள்ள அவருக்கு இன்னும் ஒரு ஓவர் பந்துவீச வாய்ப்பளித்திருந்தால் அவர் 5 விக்கெட்டை கூட வீழ்த்தியிருக்க முடியும். அதனை வேண்டுமென்றே பாண்டியா தவிர்த்து விட்டார் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அஸ்வனி குமாருக்கு ஆதரவாக பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் : இன்றைய நாள் அஸ்வனி குமாருக்கு அதிர்ஷ்டமான நாளாக இருந்தது. தனது அறிமுகப் போட்டியில் இவ்வளவு பெரிய அணிக்கு எதிராக அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக முதல் பந்தில் விக்கெட் கிடைப்பதெல்லாம் மிகப்பெரிய விஷயம். நான் மும்பை அணியின் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு எஞ்சியிருந்த ஒரு ஓவரை கொடுத்திருப்பேன்.
இதையும் படிங்க : அஸ்வினை நிறுத்துங்க.. திரிபாதியை தூக்கிட்டு அவரை கொண்டு வாங்க.. சிஎஸ்கே ஜெய்க்க ஸ்ரீகாந்த் 4 ஆலோசனை
அப்படி கொடுத்திருக்கும் பட்சத்தில் அவரால் 5 விக்கெட்டையும் வீழ்த்தியிருக்க முடியும். மும்பை மைதானத்தில் பந்து வீசுவது எப்போதும் நெருக்கடி மற்றும் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும். ஆனால் அந்த மைதானத்திலே அவருடைய பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது தன்னை கவர்ந்ததாக ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



