
பாகிஸ்தானில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் இந்தத் தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுகிறது. எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாகிஸ்தான் வாரியம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று நாங்கள் அத்தொடரில் விளையாட மாட்டோம் என்று இந்தியா ஆரம்பத்திலேயே அடம் பிடிக்க துவங்கியுள்ளது. ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தான் செல்வதை மொத்தமாக நிறுத்தியுள்ள இந்தியா இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் நிறுத்தியுள்ளது. இருப்பினும் ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடி வருகிறது.
பிசிசிஐ நிலைப்பாடு:
ஆனால் அதிலும் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கை மண்ணில் விளையாடி வெற்றியும் கண்டது. எனவே அதே போல இம்முறையும் தங்களுடைய 2025 சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை பாகிஸ்தானுக்கு பதிலாக துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனால் இம்முறையும் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் அது போன்ற செய்திகளை யார் வெளியிடுகிறார்கள் என்று தங்களுக்கு தெரியாது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று இதுவரை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி தி பிரிண்ட் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற தகவல்களை யார் வெளியிடுகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. இது பற்றி பிசிசிஐ இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்த வரை இந்திய அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் செய்வோம்”
இதையும் படிங்க: தோனி, சச்சினுக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்காது.. ஏன்னா விராட் கோலி அவங்களை மதிக்கல.. மிஸ்ரா விமர்சனம்
“இந்திய அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே நாங்கள் எங்களுடைய அணியை பாகிஸ்தானுக்கு விளையாட அனுப்பி வைப்போம். எனவே நாங்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு தகுந்தார் போல் முடிவை எடுப்போம்” என்று கூறினார். இதனால் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுமா என்பது வருங்காலத்தில் தான் தெரிய வரும். மறுபுறம் தங்கள் நாட்டில் உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதால் தாராளமாக வந்து விளையாடுங்கள் என்று பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு வரவேற்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.