
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த அணிக்கு அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களால் 17 வருடங்களாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் இம்முறை ரஜத் படிதார் தலைமையில் முதல் முறையாக ஆர்.சி.பி கோப்பையை வென்றது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில் அவருடைய பெயரில் ஒரு மளிகை கடைக்காரர் “தோனி பேசுகிறேன்” என்று விராட் கோலியிடம் கிண்டலாக பேசியுள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது விதிமுறைகள் படி இப்போதெல்லாம் ஒரு நபர் தன்னுடைய மொபைல் எண்ணை 90 நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இல்லையேல் அந்த எண் மற்றொரு நபருக்கு புதிய முகவரியில் வழங்கப்படும்.
அந்த வகையில் ரஜத் படிதார் தன்னுடைய 90 நாட்களுக்கு மேலாக ரீசார்ஜ் செய்யாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. அதன் காரணமாக அவருடைய எண்ணுக்கான சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் அதே எண்ணில் சிம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சிம்மை சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் கரியாபந்த் மாவட்டத்தில் உள்ள மளிகை கடைக்காரர் மனிஷ் என்பவர் தனது முகவரியை கொடுத்து புதிய பெயரில் வாங்கியுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அந்த சிம்மை ஜூன் மாதத்தின் இறுதியில் வாங்கிய அவர் தன்னுடைய மொபைலில் போட்டுள்ளார். அடுத்ததாக அவர் வாட்ஸ்ஆப் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளார். அதில் ப்ரொபைல் பக்கத்தில் ரஜத் படிதார் புகைப்படம் இருப்பதை மனிஷ் மற்றும் அவருடைய நண்பர் கெம்ராஜ் பார்த்துள்ளனர்.
விரைவில் விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரிடமிருந்து தொலைபேசி அழைப்புகளும் வந்துள்ளன. அவர்கள் ரஜத் படிதார் என்று நினைத்து மனிஷிடம் பேசியுள்ளார்கள். ஒரு கட்டத்தில் படிதார் தம்முடைய பழைய எண்ணுக்கு போன் செய்து மனிஷிடம் பேசியுள்ளார். அந்த எண் பல நட்சத்திரங்களுடன் தொடர்பில் இருப்பதால் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று படிதார் கேட்டதாக தெரிகிறது.
மறுபுறம் நம்மை யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்த மனிஷ் “அப்படியா, ஆமாம் நான் தோனி பேசுகிறேன்” என்று அவர்களுக்கு கிண்டலான பதிலைக் கொடுத்துள்ளார். மேலும் நம்மிடம் போய் விராட் கோலி போன்றவர்கள் பேசப் போகிறார்களா? என்று நினைத்த மனிஷ் சிம்மை தர முடியாது என்று படிதாரிடம் தெரிவித்துள்ளார். அதனால் வேறு வழியின்றி படிதார் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: “திஸ் இஸ் நாட் எ யங் டீம்”, “திஸ் இஸ் கன் டீம்” இங்கி தொடர் ஆரம்பித்த போது கம்பீர் சொன்ன வார்த்தை – கருண் நாயர் பேட்டி
அதை விசாரித்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து சிம்மை கைப்பற்றி படிதாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இந்த விவரங்கள் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதே போல “தவறான நம்பரால் விராட் கோலியிடம் பேசக் கிடைத்த வாய்ப்பால் தம்முடைய வாழ்நாள் கனவு நிஜமானது” என்று கெம்ராஜ் கூறியுள்ளார்.