ஐபிஎல் 2022 : மும்பை அணி தவறவிட்ட ஜாம்பவானை வளைத்து போட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் – சூப்பர் சாய்ஸ்

RR
- Advertisement -

ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இதில் வரும் மார்ச் 26 – மே 22 வரையில் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தயாராகும் அணிகள்:
அதன்படி முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்திக்க உள்ளது. வழக்கம் போலவே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. அதில் குறிப்பாக நடப்புச் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இதர அணிகளை காட்டிலும் முன்கூட்டியே தீவிர வலை பயிற்சியை குஜராத் மாநிலம் சூரத் நகரில் துவங்கியுள்ளது.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் இந்த தொடருக்காக மும்பை, பெங்களூரு ஆகிய அணிகளும் வரும் வாரத்தில் வலை பயிற்சியை துவக்க உள்ளன. அதில் பங்கு பெறுவதற்காக அனைத்து அணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்கள், துணை பயிற்சியாளர்கள், உடற்பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவினர் அந்தந்த அணிகளுடன் இணைந்து வருகிறார்கள்.

ட்விஸ்ட் வைத்த ராஜஸ்தான்:
இந்நிலையில் இலங்கையை சேர்ந்த நட்சத்திர ஜாம்பவான் பந்துவீச்சாளர் லசித் மலிங்காவை தங்களின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான பயிற்சியாளர்களை ஒரு மாதம் முன்பாகவே தேர்வு செய்து அறிவித்து விட்டது. அப்படிப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் மலிங்காவை தங்களின் பயிற்சியாளராக நியமித்துள்ள அந்த அணி நிர்வாகம் கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்துள்ளது என்றே கூறவேண்டும்.

- Advertisement -

ஏனெனில் 340 சர்வதேச போட்டிகளில் 546 விக்கெட்டுகளை எடுத்துள்ள இலங்கையின் மலிங்கா கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை அந்த அணிக்காக வென்று கொடுத்த கேப்டனாக சாதனை படைத்தவர். மேலும் தனது வித்தியாசமானபந்துவீச்சால் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட உலகின் தரமான பேட்ஸ்மேன்களை திணறடித்த இவரை “யார்கர் கிங்” ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

கோட்டை விட்டதா மும்பை இந்தியன்ஸ்:
கடந்த 2009 முதல் ஓய்வு பெறும் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் அந்த அணி 4 முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிக மிக முக்கிய பங்காற்றினார் என்று கூறலாம். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த மாபெரும் இறுதி போட்டியில் கடைசி பந்தில் விக்கெட் எடுத்து கொடுத்து வெறும் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணிக்கு கோப்பை வென்று கொடுத்த பெருமை இவரையே சேரும். மேலும் 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை எடுத்துள்ள இவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையையும் படைத்துள்ளார்.

- Advertisement -

அப்படிப்பட்ட இவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்காமல் கோட்டை விட்டு விட்டதா என்ற கேள்வி மும்பை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே பயிற்சியாளராக இருக்கும் இலங்கையின் ஜாம்பவான் குமார் சங்கக்காரா இருப்பதால் அவரின் நட்பைப் பயன்படுத்தி அந்த அணி நிர்வாகம் மலிங்காவை தங்களது பயிற்சியாளராக வளைத்துப் போட்டதாக தெரிய வருகிறது.

இதையும் படிங்க : நீங்க ஸ்ட்ரென்த்னு நெனைக்குற இதுதான் உங்களோட வீக்னஸ். கேப்டன் ரோஹித்துக்கு – கவாஸ்கர் எச்சரிக்கை

“ஐபிஎல் தொடரில் அதுவும் ஒரு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாயிலாக மீண்டும் காலடி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜஸ்தான் மற்றும் குமார் சங்ககாரா உடன் இணைந்து பணியாற்ற மிகுந்த ஆவலுடன் உள்ளேன்” என இதுபற்றி லசித் மலிங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எது எப்படியோ ஐபிஎல் தொடரின் ஒரு ஜாம்பவானாக இருக்கும் லசித் மலிங்கா மீண்டும் இந்த தொடரில் பங்காற்ற இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement