வீடியோ : மீண்டும் பஞ்சாப் வெற்றியை நொறுக்கிய திவாடியா – ஃபினிஷிங் செய்வதில் தோனி, டிகே’வை மிஞ்சிய சாதனை

Rahul Tewatia
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற 17வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் டைட்டன்ஸ் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் போராடி 153/8 ரன்கள் சேர்த்தது. ப்ரப்சிம்ரன் சிங் 0, கேப்டன் ஷிகர் தவான் 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக மேத்தியூ சார்ட் 36 (14) ரன்களும் ஜிதேஷ் சர்மா 25 (22) ரன்களும் தமிழக வீரர் சாருக்கான் 22 (9) ரன்களும் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 2 விக்கெட்களை எடுத்தார்.

அதை தொடர்ந்து 154 ரன்களை துரத்திய குஜராத்துக்கு 5 பவுண்டரிகளை பறக்க விட்டு 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான தொடக்கம் கொடுத்த ரிதிமான் சகா 30 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் 19, ஹர்திக் பாண்டியா 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட மற்றொரு இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 67 (49) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

தோனியை மிஞ்சும் திவாடியா:
அதனால் சாம் கரண் வீசிய கடைசி 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய ராகுல் திவாடியா சிங்கிள் எடுக்க அடுத்த பந்தில் டேவிட் மில்லர் சிங்கிள் எடுத்தார். அப்படி எளிதாக முடிய வேண்டிய போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட போது கொஞ்சமும் பதறாமல் கூலாக செயல்பட்ட திவாட்டியா 5வது பந்தில் முட்டி போட்டு நைசாக பின் திசையில் பவுண்டரியாக அடித்து 5* (2) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அவருடன் மில்லர் 17* (18) ரன்கள் எடுத்ததால் 19.5 ஓவரில் 154/4 ரன்கள் எடுத்த குஜராத் சிறப்பான வெற்றி பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் தடுமாறிய பஞ்சாப் பந்து வீச்சில் போராடியும் வெற்றி காண முடியவில்லை.

குறிப்பாக கடைசி ஓவரில் சாம் கரண் மிகச் சிறப்பாக செயல்பட்டு போராடியும் மீண்டும் ராகுல் திவாடியா பஞ்சாப்பின் வெற்றிக் கனவை நொறுக்கினார். ஏனெனில் 2020ஆம் ஆண்டு சார்ஜாவில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் பஞ்சாப் தனது கையில் வைத்திருந்த வெற்றியை தட்டிப் பறித்து ராஜஸ்தானை வெற்றி பெற வைத்து முதல் முறையாக உலக அளவில் பிரபலமானார். அதை தொடர்ந்து கடந்த வருடம் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஒரு லீக் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த சிக்ஸர்களை தெறிக்க விட்ட அவர் மீண்டும் பஞ்சாப் வெற்றியை சுக்குநூறாக உடைத்தார்.

- Advertisement -

அந்த வரிசையில் 3வது முறையாக இப்போட்டியில் செயல்பட்ட ராகுல் திவாடியாவை எங்களுடைய வெற்றியை பறிப்பதற்காகவே பிறந்தாயா? என்ற வகையில் பஞ்சாப் அணி நிர்வாகம் ட்விட்டரில் வெறுப்புடன் பாராட்டியுள்ளது. அதே போல பஞ்சாப் அணி என்றாலே அவருக்கு அல்வா சாப்பிடுவது போல என்றும் பஞ்சாப் அணிக்கு அவர் தூங்காத இரவுகளை கொடுப்பவராக இருக்கிறார் என்றும் ரசிகர்கள் கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ராகுல் திவாடியா நேற்றைய போட்டியையும் சேர்த்து இது வரை வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட 7 போட்டிகளில் கடைசி வரை அவுட்டாகாமல் நின்று தனது அணியின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார்.

இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 2020க்குப்பின் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்டிய போட்டிகளில் அதிக முறை அவுட்டாகாமல் இருந்த இந்திய வீரர் என்ற தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோரை மிஞ்சி சத்தமின்றி ராகுல் திவாட்டியா சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். அந்த பட்டியல்:
1. ராகுல் திவாடியா : 7*
2. எம்எஸ் தோனி/தினேஷ் கார்த்திக்/ராகுல் திரிபாதி : தலா 6*

இதையும் படிங்க: GT vs PBKS : இப்படி ஆடுனா கண்டிப்பா எந்த டீமா இருந்தாலும் தோக்க வேண்டியதுதான் – ஷிகர் தவான் வருத்தம்

மேலும் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 20வது ஓவரில் இதுவரை அவர் எதிர்கொண்ட 13 பந்துகளில் தலா 4 பவுண்டரி சிக்சருடன் 46 ரன்களை 353.85 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் குவித்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

Advertisement