ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா இரட்டை சூப்பர் ஓவரில் போராடி வென்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 129*, ரிங்கு 69* ரன்கள் எடுத்த உதவியுடன் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 213 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதை துரத்திய ஆப்கானிஸ்தான் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 50, குல்பதின் நைப் 55*, கேப்டன் இப்ராஹிம் 50 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் 212 ரன்கள் மட்டுமே எடுத்தது அதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிந்த நிலையில் 2வது சூப்பர் ஓவரில் இந்தியா 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.
அஸ்வின் மாதிரி:
முன்னதாக பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 16 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அடுத்தடுத்த சிக்சர்களை அடித்தும் 5வது பந்தில் ரிட்டயர்ட் அவுட்டாகி சென்றார். குறிப்பாக கடைசி பந்தில் இந்தியாவுக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது தம்மை விட சற்று வேகமாக ஓடக்கூடிய ரிங்கு சிங் எதிர்புறம் இருக்கட்டும் என்ற எண்ணத்துடன் அவர் களத்தில் இருந்து வெளியேறினார்.
அதாவது கடைசி பந்தில் 2 ரன் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் தம்மை விட ரிங்கு வேகமாக ஓடி அதை எடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் என்ற எண்ணத்துடன் ரோகித் சர்மா அந்த முடிவை எடுத்தார். ஆனால் அடுத்த பந்தில் ஜெய்ஸ்வால் 1 ரன் மட்டுமே எடுத்ததால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இருப்பினும் பொதுவாகவே சற்று மெதுவாக ஓடக்கூடிய ரோகித் சர்மா யார் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி கவலைப்படாமல் அணியின் நலனுக்காக 5வது பந்தில் ரிட்டயர்ட் அவுட்டாகி சென்றார்.
இந்நிலையில் அந்த குறிப்பிட்ட தருணத்தில் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராஜஸ்தான் அணியின் நலனுக்காக ரிட்டையர்ட் அவுட்டாகி சென்ற ரவிச்சந்திரன் அஸ்வின் போல ரோகித் சர்மா செயல்பட்டதாக ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியதற்கு பின்வருமாறு. “ஆம் அந்த நேரத்தில் அவர் அஸ்வின் லெவலில் யோசித்து செயல்பட்டார். அஸ்வின் தான் பொதுவாக இப்படி சிந்திப்பார்”
இதையும் படிங்க: 180 ரன்ஸ்.. சிக்ஸருடன் ஃபினிஷ்.. லெஜெண்ட்ஸ் போட்டியில் யுவி அணியை சச்சின் அணி சாய்த்தது எப்படி?
“அந்த வகையில் அபாரமாக செயல்பட்ட அவர் கிளாஸ் பிளேயர் என்பதை காண்பித்தார். எப்போதுமே நாங்கள் அதிரடியாக விளையாடுவதை விரும்புகிறோம். இருப்பினும் 22/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இது போன்ற போட்டிகளில் நீங்கள் கொஞ்சம் மெதுவாக விளையாட வேண்டியுள்ளது. ஆனால் கடைசியில் ரோகித் சர்மா விளையாடிய விதம் ஸ்பெஷலாக இருந்தது” என்று கூறினார்.