ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி ஆரம்பத்திலேயே நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வரலாற்றில் முதல் முறையாக ஒரு போட்டியில் தோற்கடித்து எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று எதிரணிகளுக்கு எச்சரிக்கையுடன் தரமான ஆட்டத்தை துவங்கியது.
அதைத்தொடர்ந்து பாகிஸ்தானை சென்னையில் நடைபெற்ற போட்டியில் அசால்டாக தோற்கடித்த அந்த அணி 1996 உலக சாம்பியன் இலங்கையையும் வீழ்த்தியது. அதே போல 5 கோப்பைகளை வென்று மகத்தான அணியாக திகழும் ஆஸ்திரேலியாவையும் 91/7 என்று மடக்கி பிடித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த ஆப்கானிஸ்தான் கடைசி நேரத்தில் மேக்ஸ்வெல் அதிரடியால் அதை நழுவ விட்டது.
என்னா மனசுய்யா:
அதன் காரணமாக லீக் சுற்று வாய்ப்பு நழுவி போனாலும் 9 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து பாகிஸ்தான், இலங்கை போன்ற இதர ஆசிய அணிகளை காட்டிலும் மிகச்சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கும் வரலாற்றிலேயே முதல் முறையாக தகுதி பெற்றது. அந்த வகையில் ஏராளமான முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற ஆப்கானிஸ்தான் நாடு திரும்ப தயாராகியுள்ளனர்.
இந்நிலையில் நாடு திரும்புவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த துவக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அஹமதாபாத் நகரில் தெருவோரத்தில் இருந்த சில ஏழைகளுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்துள்ளார். அதாவது நவம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் தீபாவளி தினம் கோலாகலமாக கொண்டாடப்படும் நாளன்று அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் நகரின் தூர்தர்ஷன் சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சில ஏழைகளிடம் தம்மால் முடிந்த பணத்தை குர்பாஸ் கொடுத்துள்ளார்.
குறிப்பாக அவர்களை எழுப்பாமலேயே அவர்களின் அருகில் 500 ரூபாய் தாள்களை வரிசையாக வைத்து விட்டு குர்பாஸ் சென்றுள்ளார். தீபாவளி தினத்தன்று சாலை ஓரத்தில் இருக்கும் ஏழைகள் பண்டிகையை கொண்டாடுவதற்கு தம்மால் முடிந்த சிறிய தொகையை அவர் எவ்விதமான விளம்பரமும் இன்றி வைத்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: சம்பளம் தான் கிடைக்கல.. இதாச்சும் கிடைச்சுதே.. தோற்ற பாகிஸ்தானுக்கு ஐசிசி கொடுத்த ஆறுதல் பரிசு எவ்வளவு?
இதை அந்த வழியாக சென்ற ஒரு ரசிகர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் அவரின் நல்ல மனதை என்ன மனுஷன்யா என்று பாராட்டி வருகிறார்கள். முன்னதாக இந்திய ரசிகர்கள் தங்களுக்கு மைதானங்களில் வந்து கொடுத்த ஆதரவு தான் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.