இங்கிலாந்துக்கு எதிராக விரைவில் தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் விளையாடப் போகும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் நட்சத்திர சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக ஒரு கட்டத்தில் முதன்மை வீரராக இருந்த ரகானே 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் சதமடித்து இந்தியாவை கேப்டனாக வழி நடத்தி 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் சரித்திர வெற்றி பெற உதவினார். ஆனால் அதன் பின் சதமடிக்காமல் தடுமாறிய அவர் கடந்த 2022 பிப்ரவரியில் நீக்கப்பட்டார்.
மெகா சொதப்பல்:
இருப்பினும் மனம் தளராமல் ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்த அவர் 2023 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணியில் அபாரமாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பினார். அதன் காரணமாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் நேரடியாக தேர்வாகி ஆச்சரியத்தை கொடுத்த அவர் அதிகபட்ச ஸ்கோர் அடித்து இந்தியாவின் வெற்றிக்கும் போராடினார்.
அதனால் அடுத்ததாக நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்தத் தொடரில் கத்துக்குட்டி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்ட ரகானே தற்போது இங்கிலாந்து தொடரிலும் கழற்றி விடப்பட்டுள்ளார்.
மேலும் தற்போது போட்டிக்கு நிறைய வீரர்கள் வந்துள்ளதால் இனிமேலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே நம்பப்படுகிறது. அந்த சூழ்நிலையில் இதுவரை 85 போட்டிகளில் விளையாடியுள்ள தாம் ரஞ்சி கோப்பையில் கடினமாக போராடி மீண்டும் கம்பேக் கொடுத்து இந்தியாவுக்காக 100வது போட்டியில் விளையாடி சாதனை படைப்பதை லட்சியமாக வைத்திருப்பதாக நேற்று முன்தினம் ரகானே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: தோனி, கோலியை விட ரோஹித் டாப் கேப்டன்னு சொல்ல இது போதாதா? கவாஸ்கர் பாராட்டு
ஆனால் நடைபெற்று வரும் ரஞ்சிக்கோப்பையில் ஆந்திர பிரதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் கோல்டன் டக் அவுட்டான ரகானே ஜனவரி 19ஆம் தேதி கேரளாவுக்கு எதிராக துவங்கி நடைபெற்று வரும் 2வது போட்டியிலும் கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார். அதாவது கடைசி 2 இன்னிங்ஸில் 0 (1), 0 (1) என அடுத்தடுத்து டக் அவுட்டான ரஹானே இன்னும் 2024 ரஞ்சி கோப்பையில் 1 ரன் கூட எடுக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் இப்படி செயல்பட்டால் எப்படி கம்பேக் கொடுக்க முடியும்? என்றும் 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைக்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள் என்றும் ரகானே மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.