அவரோட சேர்ந்து விளையாடபோவதை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு – சி.எஸ்.கே அணிக்காக தேர்வான ரச்சின் ரவீந்திரா

Rachin-Ravindra
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டிசம்பர் 19-ஆம் தேதி (இன்று) துபாயில் வீரர்களின் மினி ஏலமானது நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் 333 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் இந்தியாவை சேர்ந்த 214 வீரர்களும், வெளிநாட்டைச் சேர்ந்த 119 வீரர்களின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகையாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் 24 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

அவருக்கு அடுத்ததாக பேட் கம்மின்ஸ் 20 கோடியே 50 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இவர்களுக்கு அடுத்து டேரல் மிட்சல் 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

- Advertisement -

அதேபோன்று இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அவரை 1 கோடியே 80 லட்ச ரூபாய் என்கிற அசத்தலான விலையில் ஏலத்தில் எடுத்து அசத்தியது.

நிச்சயம் 10 கோடிக்கு மேல் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரச்சின் ரவீந்திராவை இவ்வளவு குறைந்த விலையில் சி.எஸ்.கே அணி ஏலத்தில் எடுத்தது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது குறித்து பேசிய ரச்சின் ரவீந்திரா கூறுகையில் :

- Advertisement -

முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக உலகின் தலைசிறந்த வீரர்களான தோனி மற்றும் ஜடேஜா போன்ற சிறப்பான வீரர்களுடன் சென்னை அணியில் இணைந்து விளையாட இருப்பதை நினைத்தால் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 ஏலம் முடிவு : 6வது கோப்பை வெல்லுமா தோனியின் படை.. புதிய சிஎஸ்கே அணி இதோ

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எவ்வாறு வரவேற்பினை அளிப்பார்கள். மைதானத்தில் எப்படி உற்சாகமான சூழ்நிலை இருக்கும் என்பது குறித்து எல்லாம் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் என்னிடம் நிறைய கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மிகப்பெரிய ஆதரவிற்கு மத்தியில் நானும் சென்னை அணியின் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன் என்று ரச்சின் ரவீந்திரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement