
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்ஸ் நகரில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்ததற்கு இளம் ஜெய்ஸ்வால் 4 கேட்ச்களை தவற விட்டது முக்கிய காரணமாக அமைந்தது ரசிகர்களை கோபமடைய வைத்தது.
அதன் காரணமாக ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டித் தீர்த்தனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் விளையாடும் ஜெய்ஸ்வால் கேட்ச் பிடிப்பது எளிதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய போட்டிகளில் ஜெய்ஸ்வால் சில அற்புதமான கேட்ச்களை பிடித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
அதே சமயம் இங்கிலாந்து மண்ணில் அவர் 4 கேட்ச்களை தவற விட்ட அதற்கான காரணம் பற்றி ஸ்ரீதர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு முதல் முறையாக சுற்றுப்பயணம் சென்று அங்கு நல்ல ஸ்லிப் ஃபீல்டராக செயல்படுவது எளிதான வேலை கிடையாது. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். ஆனால் முதன்மை போட்டியில் கேட்ச் பிடிப்பது சவாலானது”
“ஏனெனில் அங்குள்ள காலசூழ்நிலைகள் மிகவும் ஈரப்பதமாக இருக்கும். அதனால் உங்களுடைய விரல்கள் உணர்ச்சியற்றதாக இருக்கும். 2வதாக டுக் பந்துகள் உங்களிடம் வரும் போது கைகளை தள்ளும். அதனால் கேட்ச் பிடிப்பது எளிது கிடையாது. இங்கிலாந்தில் அனைத்துமே கொஞ்சம் கடினமாக இருக்கும். குறிப்பாக ஓவல் மற்றும் லீட்ஸ் ஆகியவை மிகவும் சவாலான மைதானங்களாக இருக்கும்”
“குறிப்பாக லீட்ஸ் மைதானத்தில் கிர்க்ஸ்டால் ஸ்டேண்ட் பகுதி சரிவாக இருக்கும். அங்கே காற்றும் அதிகமாக அடிக்கும் என்பதால் உங்களுடைய கச்சிதத்தன்மை மற்றும் ரிதம் பாதிக்கப்படும். அதனாலேயே இங்கிலாந்து அணியும் சில கேட்ச்களை தவற விட்டார்கள். எனவே இவை அனைத்தும் கால சூழ்நிலைகளைப் பொறுத்தது. உண்மையில் ஜெய்ஸ்வால் கல்லி பகுதியில் சிறந்த ஃபீல்டர். அதிக தவறுகளை செய்ய மாட்டார்”
இதையும் படிங்க: மழையால் பாதிக்கும் டி20 போட்டிகளின் பவர்பிளே விதிமுறையை மாற்றிய ஐசிசி.. புதிய விதிமுறை இதோ
“சொல்லப்போனால் மெல்போர்ன், லீட்ஸ் ஆகிய 2 போட்டிகள் மட்டுமே அவருக்கு மோசமாக அமைந்தது. மற்ற படி சிறந்த ஃபீல்டரான அவர் வங்கதேசத்துக்கு எதிராக கான்பூரில் அற்புதமான கேட்ச் பிடித்தார். வர்ணனையாளர் அறையில் அமர்ந்து கொண்டு விமர்சனம் செய்வது மிகவும் எளிது. ஆனால் இங்கிலாந்தில் சவாலான சூழ்நிலைகள் இருக்கும். முதல் முறையாக அதை எதிர்கொள்வது இன்னும் சவாலாக இருக்கும்” என்று கூறினார்.