சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறையை ஐசிசி நேற்று அறிவித்தது. குறிப்பாக தெளிவற்ற கேட்ச் பிடித்தால் நோபால் வழங்கப்படும், டெஸ்ட் போட்டிகளிலும் 60 நொடிக்குள் அடுத்த ஓவரை வீசத் துவங்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை ஐசிசி அறிவித்தது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்படும் சர்வதேச டி20 போட்டிகளுக்கான பவர் பிளே விதிமுறையை ஐசிசி மாற்றி அறிவித்துள்ளது.
பொதுவாக 20 ஓவர்கள் கொண்ட ஒரு சர்வதேச போட்டியில் முதல் 6 ஓவர்கள் பவர்பிளேவாக விளையாடப்படும். அந்த ஓவரில் உள்வட்டத்திற்கு வெளியே 2 ஃபீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ரசிகர்களை கவர்வதற்காகவும் ஸ்விங் ஆகக்கூடிய புதிய பந்துகளை சமாளித்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவிப்பதற்காகவும் பவர் பிளே விதிமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பவர்பிளே விதிமுறை:
இருப்பினும் மழை பெய்யும் போட்டிகளில் டிஎல்எஸ் விதிமுறைப்படி ஓவர்கள் குறைத்துப் போட்டி நடத்தப்படும். அப்போது குறைக்கப்படும் பவர்பிளே ஓவர்களின் எண்ணிக்கையில் தான் தற்போது ஐசிசி மாற்றம் செய்துள்ளது. இதற்கு முன்பு வரை 20 ஓவர்களில் 6 ஓவர்கள் அதாவது 30% ஓவர்கள் பவர் பிளே ஓவராக கடைபிடிக்கப்பட்டு வந்தது.
அதுவே மழையால் ஓவர்கள் குறைக்கப்படும் போது 25% மட்டுமே பவர் பிளேவாக விளையாடப்பட்டது. எடுத்துக்காட்டாக ஒரு டி20 போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டால் 2 ஓவர்கள் மட்டுமே பவர்பிளேவாக விளையாடப்படும். அதைத்தான் தற்போது ஐசிசி முழுமையாக கிட்டத்தட்ட 30% மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறையின் படி இனிமேல் 8 ஓவர்கள் கொண்ட போட்டிக்கு 2.2 ஓவர்கள் பவர்பிளேவாக விளையாடப்படும்.
ஐசிசி அறிவிப்பு:
வரும் ஜூலை 10ஆம் தேதி முதல் இந்த புதிய பவர் பிளே விதிமுறை நடைமுறைக்கு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அந்த விதிமுறையின் படி 5 ஓவர்கள் கொண்ட போட்டிக்கு 1.3 ஓவர்கள் பவர் பிளேவாக விளையாடப்படும். அதே போல 6 ஓவர்களுக்கு 1.5, 7 ஓவர்களுக்கு 2.1, 8 ஓவர்களுக்கு 2.2, 9 ஓவர்களுக்கு 2.4, 10 ஓவர்களுக்கு 3 ஓவர்கள் பவர் பிளேவாக விளையாடப்படும்.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ஸ்டார் பிளேயர்.. மேலும் வலிமையான இங்கிலாந்து – இந்தியா தாக்குப்பிடிக்குமா?
11 ஓவர்களுக்கு 3.2, 12 ஓவர்களுக்கு 3.4, 13 ஓவர்களுக்கு 3.5, 14, ஓவர்களுக்கு 4.1, 15 ஓவர்களுக்கு 4.3, 16 ஓவர்களுக்கு 4.5, 17 ஓவர்களுக்கு 5.1, 18 ஓவர்களுக்கு 5.2, 19ஓவர்களுக்கு 5.4 ஓவர்கள் பவர்பிளே ஓவர்களாக விளையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 தரப்புக்கும் பவர்பிளே நியாயமான முறையில் இருக்கும் என்று ஐசிசி கூறுவது குறிப்பிடத்தக்கது.



