ஆலோசனையை கேட்காமல் தோனிக்கே பாடம் கற்பித்த விராட் கோலி – வெற்றி சரித்திரத்தின் முதல் படியை விவரிக்கும் ஸ்ரீதர்

MS dhoni r sridhar virat kohli
- Advertisement -

மகத்தான கேப்டனான எம்எஸ் தோனி 2013க்குப்பின் சச்சின் போன்ற சீனியர் வீரர்களின் ஓய்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை பதிவு செய்ய முடியாமல் தடுமாறினார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது கேப்டன்ஷிப் சற்று சுமாராக இருந்த நிலையில் 2014இல் தொடர் தோல்விகள் பரிசாக கிடைத்தது. அந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் காயமடைந்த தோனிக்கு பதிலாக முதல் முறையாக விராட் கோலி தற்காலிக கேப்டனாக செயல்பட்டார்.

Dhoni

- Advertisement -

அப்போட்டியில் ஆக்ரோஷமாக கேப்டன்ஷிப் செய்த விராட் கோலி 2 இன்னிங்ஸ்சிலும் சதமடித்து வெற்றிக்கு போராடினார். குறிப்பாக 364 ரன்களை துரத்தும் போது 144 ரன்கள் விளாசிய அவருடன் தமிழக வீரர் முரளி விஜய் 99 ரன்களில் விளையாடிய போது இந்தியா வெற்றியை கையில் வைத்திருந்தது. ஆனால் அவர்கள் அவுட்டானதும் மடமடவென விக்கெட்டுகளை இழந்த இந்தியா இறுதியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தோனிக்கே பாடம்:
அப்போட்டியில் ஆக்ரோஷமாக கேப்டன்ஷிப் மற்றும் கேப்டனாக முன்னின்று 364 ரன்களை வெறித்தனமாக துரத்திய விராட் கோலியின் பண்புகளைப் பார்த்த தோனி அடுத்த தலைமுறைக்கு வழி விடுவதற்கு இதுவே சரியான நேரம் என்பதையும் தமது வெள்ளைப் பந்து கேரியரை நீட்டிப்பதற்கான காலத்தின் கட்டாயம் ஏற்பட்டதையும் உணர்ந்து 3வது போட்டியுடன் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் 364 ரன்களை துரத்துவது அனைத்து இந்திய வீரர்களாலும் முடியாது என்பதால் தற்காப்புக்காக ட்ராவை நோக்கி விளையாடுமாறு தோனி தெரிவித்த போது முயற்சித்தால் தானே முடியும் என்று விராட் கோலி மறுப்பு தெரிவித்து விட்டதாக முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Dhoni

இறுதியில் வெற்றியை நெருங்கியதால் அந்த முடிவால் கவரப்பட்ட தோனி அதன் காரணமாகவே டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை விராட் கோலியிடம் ஒப்படைத்து விட்டு விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்படி தோனிக்கே பாடம் கற்பித்த விராட் கோலி பொறுப்பேற்ற போது 7வது இடத்திலிருந்த இந்தியாவை 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான ஆசிய கேப்டனாக சாதனை படைத்தார். அந்த சரித்திரத்தின் முதல் படியை பற்றி ஆர் ஸ்ரீதர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“அப்போட்டியின் கடைசி நாளில் இலக்கு எதுவாக இருந்தாலும் இந்தியா அதிரடியாக விளையாடும் அணுகு முறையில் எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது என்பதில் விராட் கோலி உறுதியாக இருந்தார். குறிப்பாக இரவோடு இரவாக ஆஸ்திரேலியா டிக்ளர் செய்தால் ஓவருக்கு 4 ரன்கள் வீதம் சேசிங் செய்வதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். மேலும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ட்ரா என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையில் விராட் கோலி இருந்தார். அந்த நிலையில் பேருந்து பயணத்தில் எம்எஸ் தோனி கூறியதை விராட் கோலி என்னிடம் பின்னர் தெரிவித்தார்”

Sridhar

“அதாவது நீங்கள் எந்த இலக்கையும் சேசிங் செய்யக்கூடிய வீரர் என்பதை நான் அறிவேன். ஆனால் ஒரு கேப்டனாக நீங்கள் அணியை பற்றியும் இதர வீரர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். குறிப்பாக கடைசி நாளில் 360 ரன்களை அனைத்து வீரர்களால் சேசிங் செய்ய முடியுமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு முடிவு எடுக்கும் போது நமது அணியின் மொத்த பலத்தையும் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டும் என்று தோனி தம்மிடம் கூறியதாக விராட் கோலி என்னிடம் தெரிவித்தார்”

- Advertisement -

“அதில் உள்ள நன்மைகளை விராட் கோலி புரிந்து கொண்டார் என்றாலும் தொடர்ந்து தன்னுடைய நேர்மறையான எண்ணத்தில் நிலையாக இருந்தார். குறிப்பாக “நாம் முயற்சித்தால் தானே நம்மால் சாதிக்க முடியுமா இல்லையா என்ன நடக்கும் என்பது தெரியும்? டெஸ்ட் வரலாற்றில் நாம் கடைசி நாளில் 360 ரன்களை வெற்றிகரமாக துரத்தியதில்லை. ஏனெனில் நாம் இதுவரை அதை செய்ய முயற்சிக்கவில்லை. நாம் ஏன் இப்போது அதை முயற்சிக்கக் கூடாது? அதை முயற்சித்தால் தானே நாம் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை அறிய முடியும்” என்று விராட் கோலி தோனிக்கு பதிலளித்தார்”

இதையும் படிங்க: சுப்மன் கில் சரிப்பட்டு வரமாட்டார், டி20 கிரிக்கெட்டில் மிரட்டும் அவருக்கு சான்ஸ் கொடுங்க – கம்பீர் ஓப்பன் டாக்

“இறுதியில் விராட் கோலி – முரளி விஜய் ஆகியோர் இருந்த போது 242/2 என்ற நிலையில் இருந்த இந்தியா பின்னர் நேதன் லயன் சுழலில் சிக்கி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் அது தான் இந்திய டெஸ்ட் அணி இன்று ஜொலிப்பதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தியது. அது தான் டெஸ்ட் போட்டிகளை எப்படி விளையாட வேண்டும் என்பதையும் காட்டியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement